CUET இளங்கலைத் தேர்வுகளை திடீரென ஒத்திவைத்த என்டிஏ; என்ன காரணம்?
இரண்டாம் கட்ட CUET இளங்கலைத் தேர்வுகளை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை திடீரென ஒத்திவைத்துள்ளது.
இரண்டாம் கட்ட CUET இளங்கலைத் தேர்வுகளை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை திடீரென ஒத்திவைத்துள்ளது. நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படுகிறது.
ஜூலை மாதத்தில் முதல்கட்டத் தேர்வு
இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. ஜூலை மாதத்தில் இந்தத் தேர்வு நடைபெற்றது. குறிப்பாக 15.07.2022, 16.07.2022, 19.07.2022, 20.07.2022 மற்றும் 04.08.2022, 05.08.2022, 06.08.2022, 07.08.2022, 08.08.2022, 10.08.2022 ஆகிய தேதிகளில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு நடைபெற்றது.
இரண்டாம் கட்ட CUET இளங்கலைத் தேர்வு
2-ம் கட்டத் தேர்வு நேற்று (ஆகஸ்ட் 4) நாடு முழுவதும் 259 நகரங்களில் 489 தேர்வு மையங்களில் நடைபெற்றது. எனினும் கேரள மாநிலத்தில் கன மழை காரணமாகத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளிலும் CUET இளங்கலைத் தேர்வு நடைபெறுகிறது.
இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 4) நடைபெற்ற முதல் ஷிஃப்ட் தேர்வில் குளறுபடி ஏற்பட்டதாகத் தேர்வர்களிடம் இருந்து கணிசமான புகார்கள் எழுந்தன. இதையைடுத்துத் தேர்வுகளை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக என்டிஏ அறிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம், அசாம், புதுடெல்லி, அம்பாலா, பொக்காரோ, கிரித், ஜாம்ஷெட்பூர், லே, அவுரங்காபாத், வார்தா, கோராபுத், காரைக்கால், ஜோத்பூர், அகர்தலா, நொய்டா, வாரணாசி மற்றும் ஹூக்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற முதல் ஷிஃப்ட் தேர்வுகள் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை கோயம்புத்தூர், திண்டுக்கல், திருவாரூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய இடங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் ஷிஃப்ட்டில் நடைபெற்ற CUET (UG) – 2022 தேர்வில் நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் காரணங்களுக்காக சில தேர்வு மையங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது.
அதேநாளில் இரண்டாவது ஷிஃப்டில் நடைபெற்ற தேர்வுகளிலும் குளறுபடி நடந்துள்ளது. அதற்கான கேள்வித் தாள்கள் 2.30 மணிக்கு பதில் 5 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் 3 மணிக்குத் தொடங்க வேண்டிய தேர்வு 5.25 மணிக்குத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து இந்தத் தேர்வும் ரத்து செய்யப்பட்டு, ஆகஸ்ட் 12 முதல் 14 வரையிலான தேதிகளில் தேர்வு நடத்தப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்