CAT 2025: கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 12 பேர் சென்ட்டம்- ஆண்களே ஆதிக்கம்! அடுத்தது என்ன?
CAT 2025 Result: 100 பர்சன்டைல் பெற்ற 12 பேரில் டெல்லியைச் சேர்ந்த 3 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். ஹரியானா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தலா 2 பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

ஐஐஎம் எனப்படும் இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM) கோழிக்கோடு, 2025ஆம் ஆண்டிற்கான பொது நுழைவுத் தேர்வு (CAT) முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள ஐஐஎம் உள்ளிட்ட முன்னணி பிசினஸ் ஸ்கூல்களில் (B Schools) சேர்வதற்காக நடத்தப்பட்ட இத்தேர்வில், இந்த ஆண்டு சுமார் 2.58 லட்சம் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.
முடிவு விவரங்கள்
வெளியான முடிவுகளின்படி, நாடு முழுவதும் 12 மாணவர்கள் முழுமையாக 100 பர்சன்டைல் (Percentile) மதிப்பெண் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக, 26 பேர் 99.99 பர்சன்டைல் எடுத்துள்ளனர்.
மாநில வாரியான சாதனையாளர்கள்
100 பர்சன்டைல் பெற்ற 12 பேரில் டெல்லியைச் சேர்ந்த 3 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். ஹரியானா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தலா 2 பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர். மேலும் உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒருவரும் 100 பர்சன்டைல் பெற்றுள்ளனர்.
பாலின விகிதம்
100 மற்றும் 99.99 பர்சன்டைல் பெற்ற முதல்கட்ட வெற்றியாளர்கள் பட்டியலில் மாணவர்களே (ஆண்கள்) அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அதேபோல், 99.8 பர்சன்டைல் பெற்ற 26 பேரில், 21 பேர் மாணவர்கள் மற்றும் 5 பேர் மாணவிகள் ஆவர்.
எப்படிப் பார்ப்பது?
தேர்வெழுதிய மாணவர்கள் iimcat.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்,
தங்கள் பயனர் ஐடி (User ID) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தித் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.
மேலும், மதிப்பெண் சான்றிதழைப் (Scorecard) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வை நடத்திய ஐஐஎம் கோழிக்கோடு அறிவித்துள்ளது.
அடுத்தது என்ன?
ஐஐஎம் எனப்படும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் கேட் 2025 மதிப்பெண்கள் மற்றும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் குறிப்பிட்ட தேர்வு அளவுகோல்களின் அடிப்படையில் தங்கள் தனிப்பட்ட குறுகிய பட்டியல்களை வெளியிடும். ஐஐஎம் களைத் தவிர, 93 ஐஐஎம் அல்லாத உயர்கல்வி நிறுவனங்களும் தங்கள் மேலாண்மை திட்டங்களில் சேர கேட் 2025 மதிப்பெண்களைப் பயன்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.






















