தனிப்பட்ட மாணவி பாதிப்பை அரசியலாக்குவதா? பொள்ளாச்சி சம்பவம் நினைவிருக்கா? அமைச்சர் செழியன் கேள்வி
திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்: உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு, 2ஆம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தாக்குதல் நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து கோட்டூர்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றிரவு உணவு அருந்திய பிறகு, தான் காதலிக்கும் 4ஆம் ஆண்டு மாணவன் உடன் மறைவான இடத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவர், மாணவனை அடித்து விரட்டிவிட்டு தன்னை பாலியல் தாக்குதல் செய்ததாக அம்மாணவி புகாரளித்துள்ளார்.
தீவிரமடையும் விசாரணை
மாணவியை தாக்கியவர்கள் பல்கலைக்கழக மாணவர்களா? அல்லது வெளியில் இருந்து வந்தவர்களா? என்பது குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல, பெண் காவல் அதிகாரிகள் புகாரளித்த மாணவியிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.
செல்போன் சிக்னல்கள் ஆய்வு
சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்படுவதுடன், சைபர் கிரைம் உதவியுடன் நேற்றிரவு அப்பகுதியில் இருந்த செல்போன் சிக்னல்களையும் போலீசார் ஆய்வு செய்கின்றனர். பல்கலை. வளாகத்தில் இரவு நேரத்தில் காவல் பணியில் இருந்த காவலாளிகளிடமும் விசாரணை நடந்து வருகின்றது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தை அரசியல் ஆக்க விரும்புகிறவர்கள் கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் காவல்துறையில் புகார் அளிக்கக் கூட பாதிக்கப்பட்டவர்கள் பயந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் சாடியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தெரிவித்துள்ளதாவது:
’’கிண்டி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்.
தனிப்பட்ட மாணவி பாதிக்கப்பட்டதை அரசியல் ஆக்குவதா?
தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தை அரசியல் ஆக்க விரும்புகிறவர்கள் கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் காவல்துறையில் புகார் அளிக்கக் கூட பாதிக்கப்பட்டவர்கள் பயந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.’’
இவ்வாறு அமைச்சர் செழியன் தெரிவித்துள்ளார்.