7.5% இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது : அரசு எச்சரிக்கை!
அரசு ஒதுக்கீட்டில் கலந்தாய்வின் மூலம் சேர்க்கைக்கு வரும் பயனாளிகளிடமிருந்து கட்டணங்களை பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் வசூலிக்கக் கூடாது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்துத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசுப் பள்ளிகளில் படித்து பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையில் 7.5% முன்னுரிமையின் அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணாக்கர்களுடைய கல்விக்காக ஆகக்கூடிய செலவீனங்களான, படிப்புக் கட்டணம், விடுதிக் கட்டணம் அல்லது போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் அரசே வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தொழில் நுட்பக் கல்வி இயக்குநரின் கடிதம் வாயிலாக அனைத்துப் பொறியியல் கல்லூரிகளுக்கும் எந்த வித கட்டணங்களையும் மேற்படி இட ஒதுக்கீட்டில் சேரும் மாணாக்கர்களிடம் வசூலிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது
அரசு, அரசு உதவி பெறும் மற்றம் தனியார் தொழிற் கல்லூரிகளில் ஒற்றை சாளர கலந்தாயிவின் மூலம் சேர்க்கைப் பெறும் முதல் பட்டதாரி மாணாக்கர்களுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொறியியல் கல்லூரிகளில் சேரும் முதல் பட்டதாரி மாணாக்கர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தெரியப்படுத்தப்படுகிறது.
அதேபோல சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச / கட்டண இருக்கைகளில் பயிலும் ஆதி திராவிடர் / பழங்குடியினர் / கிறித்துவ மதம் மாறிய மாணவ / மாணவியரின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்குள் உள்ளவர்களுக்கு கட்டாய, திருப்பி செலுத்தப்படாத அனைத்துக் கல்வி கட்டணங்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வித கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது
மேலும் அக்கட்டணங்கள் அனைத்தும் மாணாக்கர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டபின் மாணாக்கர்கள்அக்கட்டணங்களை அவர்கள் பயிலும் கல்லூரிக்கு செலுத்த வேண்டும். அவ்வாறு மாணாக்கர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் முன்னர் மேற்படி இடஒதுக்கீட்டில் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேரும் மாணாக்கர்களிடம் எந்த வித கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது.
ஆயினும் அரசின் மேற்படி ஆணைகளை மீறி சில பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வின் வழி அரசு ஒதுக்கீட்டில் சேர வரும் மாணவ/மாணவிகளிடமிருந்து அனைத்துக் கட்டணங்களையும் செலுத்த வற்புறுத்தப்படுவதாகப் புகார்கள் பெறப்படுகின்றன. எனவே, அரசு ஒதுக்கீட்டில் கலந்தாய்வின் மூலம் சேர்க்கைக்கு வரும் பயனாளிகளிடமிருந்து கட்டணங்களை பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் வசூலிக்கக் கூடாது என கண்டிப்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதனை மீறும் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.