ஆடிட்டர் தேர்வில் அசத்திய அண்ணன்... தங்கை... தேசிய அளவில் முதலிடம் பிடித்த 19 வயது மாணவி!
“நானும் எனது சகோதரர் சச்சினும் பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒன்றாக படித்து வருகிறோம். IPCC மற்றும் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் தேர்வுக்கும் இருவரும் ஒன்றாகவே தயாராகி வெற்றிபெற்று இருக்கிறோம்”
கணக்கு தணிக்கையாளர் (ஆடிட்டர்) என்று அழைக்கப்படும் CA (CHATERED ACCOUNTANTS) தேர்வை ICAI நடத்தி வருகிறது. கடினமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் இதில் தேர்ச்சியடைவதே சாதனையாக பார்க்கப்படும். இந்த கணக்கு தணிக்கையாளருக்கான தேர்வுகள் இந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டன.
இந்தியா முழுவதும் 684 தேர்வு மையங்களில் நடைபெற்ற கணக்குத் தணிக்கையாளர் புதிய பாடத்திட்டத்துக்கான இறுதித் தேர்வில் 83 ஆயிரத்து 606 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதே போல், பழைய பாடத்திட்டத்துக்கான இறுதித் தேர்வும் ஜூலை மாதம் 526 மையங்களில் நடைபெற்றது. இதில் 46 ஆயிரத்து 139 மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். ஜூலை மாதம் நடைபெற்ற ஆடிட்டர் பவுண்டேசன் தேர்வு உலகம் முழுவதும் உள்ள 694 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இதில் 82 ஆயிரத்து 839 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
சி.ஏ. இறுதித் தேர்வுகள் ஜூலை 5 ஆம் தேதி தொடங்கி 19 வரை நடைபெற்று உள்ளன. பழைய பாடத்திட்டத்திற்கான சி.ஏ. குரூப் 1தேர்வுகள் ஜூலை 5, 7, 9, 11 ஆகிய தேதிகள் நடைபெற்று உள்ளன. சி.ஏ. பழைய பாடத்திட்டத்துக்கான குரூப் 2 தேர்வுகள் ஜூலை 13, 15, 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்களுக்கான முடிவுகள் நேற்று icaiexam.icai.org, caresult.icai.org, icai.nic.in. ஆகிய இணையதள முகவரிகளில் வெளியிடப்பட்டன. மாணவர்களின் இ மெயில் மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இதில் பழைய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட தேர்வில் ருத் கிளே டி சில்வா முதலிடத்தையும் மாளவிகா கிருஷ்ணன் 2 வது இடத்தையும் பிடித்தனர். புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இறுதித் தேர்வில் நந்தினி அகர்வால் என்ற மாணவி முதலிடமும், ஷாக்சி ஐரன் 2 வது இடத்தையும், ஷாக்சி ராஜேந்திர குமார் மூன்றாவது இடத்தையும் பிடித்து உள்ளனர்.
இதில் முதலிடம் பிடித்த நந்தினி அகர்வாலின் வயது 19 மட்டுமே. மத்தியப் பிரதேச மாநிலம் மோரெனா மாவட்டத்தை சேர்ந்த அவர், 800 மதிப்பெண்களுக்கு 619 மதிப்பெண்களை எடுத்து முதலிடம் பிடித்து இருக்கிறார். அதே போல் நந்தினி அகர்வாலின் 21 வயது அண்ணன் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் தேர்வில் 18 வது இடத்தை பிடித்து உள்ளார். இது குறித்து நந்தினி அகர்வால் தெரிவிக்கையில், “நானும் எனது சகோதரர் சச்சினும் பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒன்றாக படித்து வருகிறோம். IPCC மற்றும் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் தேர்வுக்கும் இருவரும் ஒன்றாகவே தயாரானோம். அதில் வெற்றி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.