குட்கா வியாபாரத்தில் பிரச்னை! இளைஞரைக் கடத்திய மர்ம கும்பல்! சேலத்தில் பரபரப்பு!
சேலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் வியாபாரம் செய்து வருகின்றனர். குட்கா விற்பனை செய்ததாக ஜெயராம் மீது அம்மாப்பேட்டை காவல்துறையினர் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
சேலம் மாநகராட்சி பட்டைக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் மூலாராம் (52). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், சேலம் சின்னக்கடை வீதியில் கடந்த 3 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயராம் (22). நேற்று முன்தினம் காலை ஜெயராம் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது 4 பேர் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். காலை 6.45 மணி அளவில் திடீரென அந்த 4 பேரும் ஜெயராமின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, தயாராக இருந்த காரில் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த தகவலின் பேரில் டவுன் காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குட்கா கடத்தல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது, வாலிபர் ஜெயராமை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஒரே கிராமத்தை சேர்ந்த இவர்கள், சேலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் வியாபாரம் செய்து வருகின்றனர்.
குட்கா விற்பனை செய்ததாக ஜெயராம் மீது அம்மாப்பேட்டை காவல்துறையினர் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தனர். அவருடன் சுரேஷ், ஷாவலராம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது. 3 பேரும் தலா 75 ஆயிரம் நிவாரண நிதியாக செலுத்த வேண்டும் எனவும் கூறியது. அதன்படி பணத்தை செலுத்திய பிறகு ஜாமீனில் வெளியே வந்தனர். இதன்பிறகு ஆத்தூர், ஈரோடு, திருச்செங்கோடு பகுதியில் இந்த வியாபாரத்தை நடத்தி வந்துள்ளனர். இதில் ஷாவலராம் பெங்களூரில் இருந்து ஹான்ஸ் போன்ற போதை பொருட்களை கடத்தி வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்செங்கோடு காவல்துறையினர் லாரியுடன் மடக்கி பிடித்தனர்.
இதில் ஷாவலராம் உள்பட 2 பேரை கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்த இவர், கடந்த 20 நாளாக காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார். ஆனால் நேற்று கையெழுத்து போட வில்லை. எனவே இவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றாக குட்கா கடத்தல் தொழில் செய்து வந்திருக்கலாம் எனவும் இதில் பணம் கொடுத்தல் வாங்கலில் இந்த கடத்தல் நடந்திருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் லாரி காவல்துறையினரிடம் பிடிபட்டதால் லாரியின் உரிமையாள ரான சுரேஷ், அதற்கான நஷ்டஈடு கேட்டு ஜெயராம், ஷாவலராம் ஆகியோருக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம் எனவும் இதில் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜெயராமை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால் அவரது தந்தை மூலாராம் நடந்தது என்ன? என்பதை தெரிவிக்க மறுத்து வருகிறார். எதுவுமே தனக்கு தெரியாது என கூறிவருகிறார். எனவே போலீசார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மர்ம நபர்கள் ஜெயராமை பெங்களூருக்கு கடத்திச் சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் நெருக்கடி காரணமாக ஜெயராமை ஒப்படைத்து விடுவதாக கூறியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.