சீர்காழி: சாலை விரிவாக்கம் செய்யும் இடத்தில் மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு!
சீர்காழி அருகே தனியார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவன வளாகத்திள் மின்சாரம் பாய்ந்து கூலி தொழாலாளி உயிரிழந்ததை அடுத்து உரிய இழப்பீடு வழங்க கோரி உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா அல்லிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதான ரவி. கூலி தொழிலாளியான இவர் காத்திருப்பு பகுதியில் உள்ள அரசு மதுபான கடையான டாஸ்மாக் கடை பகுதியில் மது பிரியர்கள் குடித்து விட்டு வீசி செல்லும் காலி பாட்டில்களை சேகரித்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் ரவி காத்திருப்பு டாஸ்மாக் கடை அருகே அமைந்துள்ள நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வளாகத்திற்குள் சென்று அங்கு கிடந்த காலி பாட்டில்களை சேகரித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தனியார் நிறுவனத்தினர் அமைத்திருந்த மின்விளக்கு கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் ரவி அங்கிருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து தனியார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவன வளாகத்தில் உயிரிழந்த ரவியின் உடலை எடுக்க மறுத்து அவருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு கிராமத்தில் தனியார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவன வளாகத்தின் எதிரில் சிதம்பரம் - நாகப்பட்டினம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில் தொடர்ந்து சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் தனியார் ஒப்பந்த நிறுவனம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உயிரிழந்த ரவியின் குடும்பத்திற்கு சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டுள்ள தனியார் ஒப்பந்த நிறுவன 4 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும், 25 ஆயிரம் ரூபாய் இறுதி சடங்கிற்கும் நிவாரணமாக வழங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.
அசம்பாவிதங்களை. மேலும் போராட்டம் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் 100 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பாக குவிக்கப்பட்டிருந்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சிதம்பரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பெரும்பாலான வாகனங்கள் மற்றும் வழியில் திருப்பி விடப்பட்டன.
சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மின் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது என்றும் இந்த உயிரிழப்புக்கு முக்கிய காரணம் சீர்காழி மின்சார வாரிய அதிகாரிகள் சரியான முறையில் மின் இணைப்புகளை கவனிக்காமல் கையூட்டு பெற்றுக் கொண்டு செயல்படுவதே இதற்கு காரணம் என்றும், இதனை உடனடியாக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.