திண்டிவனம் பகுதியில் தொடர் செயின்பறிப்பு! ஹெல்மெட் கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த போலீஸ்!
விழுப்புரம்: திண்டிவனம் பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் அதிரடி கைது, 25 பவுன் தங்க நகை, கார், பைக் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு கொள்ளைகளை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் இரண்டு மர்ம நபர்கள் ஹெல்மெட் அணிந்தபடி பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும் கடந்த 11 ஆம் தேதி இரவு திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடு பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (47) என்பவர் அவரது கணவர் சிவக்குமாருடன் கோயிலுக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு சென்ற போது கீழ்மாவிலங்கை கூட்டு பாதையில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் விஜயலட்சுமி அணிந்திருந்த 9 பவுன் தாலி சரடு, 3 பவுன் செயின், டாலர் உள்ளிட்ட 13 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு வெள்ளிமேடு பேட்டை நோக்கி அதிவேகமாக சென்று விட்டனர்.
தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், ஏஎஸ்பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பிருந்தா மற்றும் தனி பிரிவு போலீசார்கள் தீவனூர் கூட்டு பாதையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக அதி வேகமாக வந்த பைக்கை நிறுத்த முயன்றனர். அப்போது அந்த மர்ம நபர்கள் போலீசாரை கண்டவுடன் அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயன்றனர்.
தப்பி செல்ல முயன்றவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த குருமஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் வினோத்குமார்(26) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கணபதி மகன் லோகநாதன்(20), என்பதும், இவர்கள் திண்டிவனம், வெள்ளிமேடு பேட்டை, மயிலம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 25 பவுன் தங்க நகைகள், கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்