Crime: பதறவைத்த கொடூரம்.. போதையில் அராஜகம்... நாய்க்குட்டிகளின் காதை வெட்டி, உப்பு தடவி சாப்பிட்ட இளைஞர்கள்..
உத்தரபிரதேச மாநிலத்தில் குடிபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் உயிருடன் இருந்த இரண்டு நாய்க்குட்டிகளின் காது மற்றும் வாலை வெட்டி உப்பு தடவி சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் நாளுக்குநாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எந்த அளவிற்கு அதிகரித்து வருகிறதோ, அதே அளவிற்கு பிராணிகள் மீதான தாக்குதலும் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களில், ஓடும் காருக்கு பின்னால் ஒரு நாய் கட்டப்பட்டு இழுத்து செல்லப்பட்டு, நண்பர்கள் நான்கு பேர் இணைந்து ஒரு நாயை மொட்டை மாடியில் இருந்து தூக்கி எரிந்தது, ஆடு மற்றும் மாடுகள் மீது சுடு எண்ணெய், ஆசிட் வீசிய வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் அதிர்ச்சி அலையை வீசியது.
அந்த வரிசையில், உத்தரபிரதேச மாநிலத்தில் குடிபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் உயிருடன் இருந்த இரண்டு நாய்க்குட்டிகளின் காது மற்றும் வாலை வெட்டி உப்பு தடவி சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள பரித்பூர் பகுதி எஸ்டிஎம் காலனியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்,” குடிபோதையில் இருந்த இரண்டு வாலிபர்கள் அருகிலிருந்த நாய்க்குட்டிகளின் காதையும், வாலையும் வெட்டியுள்ளனர். தற்போது நாய்க்குட்டிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், இரண்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.
குற்றஞ்சாட்டப்பட்ட முகேஷ் வால்மீகியும், மற்றொரு நபரும் சேர்ந்து மது அருந்தியபோது, இந்த மனிதாபிமானமற்ற செயலைச் செய்துள்ளனர். இதுகுறித்து தீரஜ் பதக் என்ற நபர் மற்றும் விலங்குகள் நலனுக்காக செயல்படும் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பின் உறுப்பினர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் மீது விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது” என தெரிவித்தனர்.
தொடர்ந்து மூத்த போலீஸ் சூப்பிரண்டு அகிலேஷ் சௌராசியா விசாரணையை தொடங்கி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
முன்னதாக, போபாலில் உள்ள சினார் பூங்காவில் ஒரு நாய் மற்றும் அதன் மூன்று குட்டிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதற்கட்ட விசாரணையில், இறந்த நாய் மற்றும் அதன் குட்டிகள் மர்ம நபர் ஒருவர் விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, மீண்டும் அதே பூங்காவில் அந்த நாய்களில் உடல்களை எரித்துள்ளார்.
விஷம் கொடுத்து கொலை:
கடந்த 4ம் தேதி காலை அப்பகுதி மக்கள் வழக்கம்போல் பூங்காவிற்கு உடற்பயிற்சி மற்றும் நடைபயணம் செய்வதற்காக வந்துள்ளனர். அப்போது, மூன்று குட்டி நாய்க்குட்டிகளில் உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளது. குட்டிகளை தொடர்ந்து தாயின் உடலும் சற்று தொலைவில் எரிக்கப்பட்டிருந்தனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
முதலில் இந்த சம்பவம் விபத்தாக கருதிய பொதுமக்கள், இறந்த பெண் நாயின் உடலில் நீல நிறத்தில் இருப்பதை கண்டு சந்தேகமடைந்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள் விலங்கு நல ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த வனவிலங்கு ஆர்வலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, நாய் குட்டி பிணமாகவும், அவற்றின் உடல் எலும்புகள் தெரியும் அளவுக்கு எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விலங்கு வதை சட்டம்:
இந்த தகவல் உடனடியாக மத்திய பிரதேச நகர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் தெரியாதவர்கள் மீது ஐபிசி பிரிவு 429 மற்றும் விலங்கு வதை சட்டம் பிரிவு 13 இன் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த விஷயத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக எம்பி நகர் காவல் நிலையப் பொறுப்பாளர் சுதிர் அர்ஜாரியா கூறுகையில், இதுபோன்ற இதயமற்ற சம்பவம் முதல்முறையாக பதிவாகியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில், ஐபிசி பிரிவு 429 மற்றும் விலங்கு வதை சட்டம் பிரிவு 13 இன் கீழ் மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.