Thiruvanmiyur Railway Station Theft: திருவான்மியூர் கொள்ளை சம்பவத்தில் நடந்தது என்ன? ரயில்வே டி.ஐ.ஜி. விளக்கம்
திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது எப்படி? என்று தெற்கு ரயில்வே டி.ஐ.ஜி. ஜெயகவுரி விளக்கம் அளித்துள்ளார்.
திருவான்மியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்குபவரை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் டிக்கெட் வழங்கும் வட இந்தியாவைச் சேர்ந்த டீக்காராமனே நாடகமாடி பணத்தை கொள்ளையடித்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர். திருடிய பணத்தையும் போலீசார் மீட்டனர்.
தெற்கு ரயில்வே ஐ.ஜி. ஜெயகவுரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, “திருவான்மியூரில் அதிகாலை பணியில் இருந்தபோது அடையாளம் தெரியாத 3 பேர் மிரட்டி பணத்தை திருடிச் சென்றதாக புகார். அவர் கூறும்போது, கை, கால்களை கட்டி வாயையும் அடைத்துவிட்டு பணத்தை கொள்ளையடித்துவிட்டதாக புகார் வந்தது.
புகார் கிடைக்கப் பெற்றவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம். சம்பவ இடம் முழுவதும் விசாரணை நடத்தினோம். டீக்காராமனிடம் முழுவதும் விசாரணை நடத்தியதில், அவர் அளித்த புகார் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. சம்பவ இடத்திலும், சுற்றியுள்ள இடத்திலும் உள்ள கண்காணிப்பு காட்சிகளையும் முழுவதும் ஆய்வு செய்தோம். புகார் கிடைக்கப் பெற்றவுடன் டி.ஜி.பி. 24 மணிநேரத்தில் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
விசாரணைக்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சாட்சியங்களின் அடிப்படையில் டீக்காராமனிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இறுதியில் டீக்காராமன் அவரது மனைவியுடன் சேர்ந்து நாடகமாடி இந்த பணத்தை கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட முழு பணமான ரூபாய். 1.32 லட்சமும் மீட்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சாட்சியங்களின் அடிப்படையில் இவர்கள்தான் குற்றங்களை செய்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
டீக்காராமனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், நண்பர்கள் உள்பட தெரிந்தவர்களிடம் அவர் நிறைய கடன் வாங்கியுள்ளார். ஆன்லைன் ரம்மியில் நிறைய பணத்தை இழந்ததால் மனைவியின் ஒத்துழைப்புடன் இதைச் செய்துள்ளனர். ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் இருந்தனர்.
டீக்காராமன் நாடகமாடி ஒரு புகார் அளித்துள்ளார். அவர் பணி நேரத்தில் தனியாக இருக்கும் நேரத்தில் மனைவிக்கு தகவல் அளித்து, அவர் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.” இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
பிக்பாஸ் அஷராவுக்கு ரூ.1 கோடி ரூபாயில் அடித்த பம்பர் பரிசு.. சோஷியல் மீடியாவில் வைரல்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்