Crime: தென்காசி அருகே வீடு புகுந்து நகை திருடிய பிரபல கொள்ளையன் கைது
தென்காசியில் வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், மேலகரம் ஸ்டேட் பாங்க் காலணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் (59). இவர், கடந்த 18-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் கதவை உடைத்து, வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த தங்க நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் குற்றாலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, காரில் வந்த ஒருவர் வீட்டிற்கு புகுந்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் 33.50 சவரன் நகையை திருடிக்கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி தெய்வம், டிஎஸ்பி நாகசங்கர் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது குற்றாலம் பேருந்துநிலையம் அருகே வாகன சோதனை செய்யப்பட்ட போது சந்தேகத்தின் பெயரில் காரில் வந்த நபரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் திருவாரூரைச் சேர்ந்த முருகானந்தம் (44) என்பது தெரிய வந்ததோடு அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின்னாக பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து தொடர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் குற்றாலத்துக்கு சுற்றுலா வந்து, சுற்றுவட்டார பகுதியில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு அந்த வீட்டிற்குள் புகுந்து திருடியதாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, முருகானந்தத்தை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்து 33.50 பவுன் நகைகளை மீட்டு தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு காவல்துறை நடத்திய தொடர் விசாரணையில் முருகானந்தம் திருவாரூர் மாவட்டங்களில் பல பகுதிகளில் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் புகுந்து கைவரிசை காட்டியதாகவும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பிரபல கொள்ளையனை பிடித்த காவலர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பூட்டிய வீடுகளை நோட்டமிட்டும், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டும் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், ரோந்து பணி மற்றும் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும், தொடர் குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசியில் வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.