Fake Matrimonial Profile : திருமண தகவல் மையங்கள் மூலம் ஏமாற்றும் மோசடி ஆசாமிகள்.. சைபர் போலீஸின் அலர்ட்
திருமண தகவல் மையங்கள் மூலமாக மர்நபர்கள் சிலர் நூதன முறையில் மோசடியில் ஈடுபடுவதால், யாரும் பணத்தை அளித்து ஏமாற வேண்டாம் என்று சைபர் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவினர் தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், திருமண தகவல் மைய வலைதளங்கள் மூலம் மோசடி செய்பவர், பாதிக்கப்பட்டவரிடம் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து பரிசு என்ற பெயரில் பணம் பறிக்கின்றனர்.
தகவலின் தன்மை:
மோசடியான ஒரு திருமண தகவல் மைய வலைதளங்களில் போலியாக சுயவிவரங்களை உருவாக்கி, வெளிநாட்டில் குடியேறியிருப்பவராக தன்னை உருவகப்படுத்திக்கொண்டு வெளிநாட்டில் உள்ள சுயவிவரங்களைத் தேடும் பெண்களை குறிவைத்து அவர்களது நம்பிக்கையை பெறுகிறார்கள். பெண்களுடன் நெருங்கிப் பழகுகிறார்கள். பின்னர், திருமணம் செய்ய விரும்புவதாக கூறி தான் ஆசையுடன் பரிசுகளை அனுப்பியிருப்பதாகவும், அது விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியால் நிறுத்தப்பட்டுள்ளது. அதை அங்கிருந்து விடுவிப்பதற்கு அவசரமாக லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது என பணத்தை பெற்று மோசடி செய்கிறார்கள்.
சைபர் குற்றவாளிகளின் தந்திரங்கள்:
வெளிநாட்டில் குடியேறியுள்ள மென்பொருள் வல்லுநர்கள் அல்லது மருத்துவர்கள் அல்லது சந்தைப்படுத்துதல் வல்லுநர்கள் என தங்களை காட்டிக்கொண்டு வெளிநாட்டில் இருந்து நல்ல வரனின் சுயவிவரங்களை தேடும் பெண்களை குறிவைத்து திருமண தகவல் மைய வலைதளங்களில் மோசடியான சுயவிவரங்களை உருவாக்குகிறார்கள்.
மின்னஞ்சல்கள், ஆன்லைன் அரட்டைகள் அல்லது சில நேரங்களில் தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் முக்கியமாக வெளிநாட்டு தொலைபேசி எண்கள் மூலம் பெண்களுடன் நெருங்கிப் பேசி அவர்களின் நம்பிக்கையை பெறுகிறார்கள். பின்னர், திருமணம் செய்ய விரும்புவதாக கூறி தான் ஆசையுடன் பரிசுகளை அனுப்பியிருப்பதாகவும், அது விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியால் நிறுத்தப்பட்டுள்ளது. அதை அங்கிருந்து விடுவிப்பதற்கு அவசரமாக லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது என்று கூறுவார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் பரிசைப் பெற சுங்கவரி மற்றும் பிற வரிகளை செலுத்துமாறு அவர்கள் கேட்பார்கள். சில நேரங்களில் குடும்பத்தில் உள்ள ஒருவர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அவசர பணம் தேவை என்றும் அதை தான் விரைவில் திருப்பித் தந்துவிடுவேன் என்பார்கள். மோசடி நபர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் பறிப்பார்கள்.
முன்னெச்சரிக்கை:
திருமண தகவல் மைய வலைதளங்களில் திருமண கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிறகு, அவற்றின் பின்னணியை பற்றிய சரியான தகவல்களை சேகரிக்கவும். திருமணத்திற்கு முன்பு ஒருபோதும் பணம் செலுத்த வேண்டாம். சுங்கத்துறையைச் சேர்ந்த எவரும் எந்தவொரு நபருக்கும் வரிகளை அனுமதிக்க அழைப்பு விடுக்கவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். மின்னஞ்சல் குறுஞ்செய்திகள் அல்லது தொலைபேசியில் தனிப்பட்ட அல்லது நிதி தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம். இதுபோன்ற மோசடியில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.