விழுப்புரத்தில் அடுத்தடுத்து துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம்
விழுப்புரத்தில் துப்பாக்கி முனையில் முகமூடி கொள்ளையர்கள் அதிமுக கிளைச் செயலாளர் உள்ளிட்ட இருவர் வீட்டில் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காமராஜ் நகர் பகுதியில் வசிப்பவர் பிலவேந்திரன் (53). நேற்று இரவு குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலையில் 25 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த மூன்று நபர்கள் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
கைத்துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவர்களின் சத்தம் கேட்டு, எழுந்த வந்த பிலவேந்திரனை கண் பகுதியில் கத்தியால் குத்திய அவர்கள், குடும்பத்தாரை பணையம் வைத்தனர். பின்னர் பிலவேந்திரன் மகன் அருண்குமார்(31) அணிந்திருந்த இரண்டு சவரன் தங்கச் செயினை பறித்த அக்கும்பல், பதிவு எண் இல்லாத மஹிந்திரா காரில் அங்கிருந்து தப்பினர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காயம் அடைந்த பிலவேந்திரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் ஓய்வதற்குள் அடுத்த புகார் போலீசாருக்கு அதிர்ச்சியளித்தது.
மைலம் காவல் நிலைய எல்லையான கன்னிகாபுரம் மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் அதிமுக கிளை செயலாளர் ஞானசேகரன் வீட்டில் நுழைந்த முகமுடி அணிந்த நான்கு நபர்கள், கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். சத்தம் கேட்டு ஞானசேகரன் எழுந்ததால் காரை நிறுத்திவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. ஒரே கும்பல் துப்பாக்கியுடன் அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவங்களின் அடிப்படையில் கொள்ளை கும்பல் திருட்டுக்கு புதிதாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில் துப்பாக்கி வைத்திருப்பதால் கொலை கும்பலாக இருக்கலாம் என்றும் சந்தேகம் வலுத்துள்ளது. பொதுவாக கொள்ளை சம்பவத்திற்கு வருவோர், கார் பயன்படுத்துவதில்லை. துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்துவதும் தமிழகத்திற்கு புதியது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திட்டமிட்டு திருடுவதும் இதற்கு முன் நடந்ததில்லை.
அப்படி பார்க்கும் இச்சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே போல முதல் திருட்டு சம்பவத்தில் காரில் வந்து, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வந்துவிட்டு ஒரு ஜெயினை மட்டும் பறித்து சென்றுள்ள சம்பவம் சந்தேகத்தை மேலும் பெரிதாக்குகிறது. முன்விரோதத்ததால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம், அல்லது கொலை கூலிப்படை செலவுக்கு பணமின்றி சம்பவத்தில் இறங்கியிருக்கலாம். ஆக மொத்தத்தில் இது புதிதாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் கும்பல் என்பது தெளிவாக தெரிகிறது.
எனவே இந்த விவகாரத்தில் போலீசார் குற்றவாளிகளை மட்டுமல்லாமல் புகார்தாரர்களையும் தீவிர விசாரணை நடத்தி அவர்களிடம் ஏதேனும் தகவல் கிடைக்கும் பட்சத்தில் விசாரணையை வேறு கோணத்திற்கு எடுத்துச் செல்ல போலீசார் முன்வந்துள்ளனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டு அதன் மூலம் குற்றவாளிகளை அடையாள் காணும் முயற்சியும் நடந்து வருகிறது.