மதுரை விரைந்தது, முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிப்பதற்கான சிறப்பு தனிப்படை..!
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிப்பதற்காக போலீசார் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் அமைச்சர் மணிகண்டன். பின்னர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பு வகித்த காலத்தில் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். ராமநாதபுரத்தில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட அவருக்கு, கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் உள்பட பல படங்களில் துணை நடிகையாக நடித்த பெண் ஒருவர் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்வதாக கூறி, தன்னுடன் மூன்று ஆண்டுகள் ஒரே வீட்டில் வசித்ததாகவும், அவரால் தான் மூன்று முறை கருவுற்றதாகவும், அவரது கட்டாயத்தினால் அந்த கருவை கலைத்ததாகவும் புகார் அளித்தார். மேலும், தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தன்னை இரண்டாவதாக திருமணம் செய்வதாக கூறியிருந்த மணிகண்டன் தற்போது சமூக வலைதளங்களில் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டுவதாகவும் புகார் அளித்திருந்தார். அவரது இந்த புகார் அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அந்த பெண் தனக்கு யாரென்றே தெரியாது என்று கூறிய நிலையில், அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரம், ஏமாற்றுதல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு என பிரிவு 313, பிரிவு 323, பிரிவு 417, பிரிவு 506 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த பிரிவுகளில் சில பிரிவுகள் ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குகள் என்பதால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இருப்பினும் முன்ஜாமீன் கோரி அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவிற்கு, துணை நடிகை தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததாலும், முன்னாள் அமைச்சர் என்பதால் மணிகண்டன் ஆதாரங்களை அழிக்க நேரிடும் என்பதாலும் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய இரு மாவட்டங்களிலும் போலீசார் அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிப்பதற்காக சென்னை போலீசாரால் சிறப்பு போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தனிப்படை மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அவரை பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.
மேலும் படிக்க : கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!