கரூர்: பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து! எமனாக வந்த டாரஸ் லாரி! கோர விபத்தில் ஒருவர் பலி
மண்மங்கலத்தில் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சுற்றுலா பேருந்தில் திருச்செந்தூரில் இருந்து சேலம் செல்வதற்காக பயணிகளுடன் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் பைபாஸ் ரோட்டில் மண்மங்கலம் நான்கு ரோடு அருகே வந்த போது மேம்பாலம் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மண் திட்டு மீது பஸ் மோதி நின்றது.
கரூர் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
சுற்றுலா பேருந்து ஒன்று திருச்செந்தூரில் இருந்து சேலத்திற்கு பயணிகளுடன் கிளம்பியுள்ளது. இந்த பேருந்தை ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜா என்ற ஓட்டுநர் ஓட்டியுள்ளார். நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக மண்மங்கலம் நான்கு ரோடு அருகே பேருந்து வந்த போது, மேம்பாலம் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மண் திட்டு மீது பஸ் மோதி நின்றது. சிறு காயங்களுடன் பயணிகள் மருத்துவமனையில் முதலுதவி எடுத்துக்கொண்டு மற்றொரு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 6:00 மணியளவில் பழுதான பேருந்தில் ஆயில் மாற்றுவதற்காக நாமக்கல், பாண்டமங்கலத்தை சேர்ந்த நித்தியானந்தம் மற்றும் மோகனூரை சேர்ந்த பெரியசாமி ஆகியோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் பின்னால் வந்த டாரஸ் லாரி பேருந்து மீது மோதியதில் பேருந்து மண் திட்டுமீது ஏறி நின்றதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நித்யானந்தம் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயரிழந்தார். பெரியசாமிக்கு கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பேருந்தின் ஓட்டுநர் ராஜா உள்ளே இருந்ததால் உயிர்தப்பினார்.
மேலும் டாரஸ் லாரியை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்டம், சீயோன் மலையை சேர்ந்த லாரி டிரைவர் ஜெயபாண்டி சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வாங்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வயலூர் பஞ்சாயத்து, நடுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் விவசாயி சீனிவாசன் வயது 65. இவரது பேரன் தேவராஜ் மகன் திருமுருகன் வயது 15 திருமுருகன் பஞ்சப்பட்டி அருகே உள்ள பி. உடையாபட்டி உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் சுமார் 7 மணி அளவில் ஸ்விட்ச் பாக்ஸில் இருந்த மின்சாரம் தாக்கியதில் திருமுருகன் துடிதுடித்தார். பேரன் துடிதுடித்ததைப் பார்த்த தாத்தா சீனிவாசன் பேரன் திருமுருகனை காப்பாற்ற சென்று திருமுருகனை மீட்ட போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
சம்பவம் அறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து பிரேத பரிசோதனை செய்வதற்காக உடல்கள் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.