புகாரளித்த சிறுமி.. ஜாமினில் வந்து வன்கொடுமை செய்த கொடூரன்
பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நபர் மீண்டும் அதே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களாக இந்தியாவில் சிறுமியர்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்திலும் இந்தச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு கோர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே சிறுமியை 3ஆவது முறையாக ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கர்தானா பகுதியில் ஒரு நபர் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஜாமீனில் வெளியே வந்த அந்த நபர் கடந்த திங்கட்கிழமை தன் மீது புகார் அளித்திருந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளார். மேலும் அந்தச் சிறுமியை 3ஆவது முறையாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக கர்தானா காவல்துறை ஆய்வாளர், "அந்த நபர் சிறுமியை பாக்ரூ என்ற இடத்திலுள்ள ஒரு கட்டிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்தச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் அச்சிறுமியை அந்த இடத்திலிருந்து மீட்டு பெற்றோர்களிடம் திரும்பி அனுப்பியுள்ளோம். அந்த நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே இதே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நபர் மீது 2 பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளது. அவற்றில் ஒரு வழக்கில் காவல்துறையின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கில் இருந்து தான் அவர் ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜாமீனில் வெளியே வந்த மீண்டும் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மற்றொரு நபரும் பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து பெண் ஒருவரை கொலை செய்துள்ளார். ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் நேத்ராம் என்ற நபர் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை கடந்த சனிக்கிழமை வெட்டி கொலை செய்துள்ளார். நேத்ராம் என்ற நபர் அப்பெண்ணை ஒராண்டிற்கு முன்பாக பாலியன் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கில் சிறையில் இருந்த அவர் கடந்த வாரம் ஜாமீன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று வழக்கை திரும்ப பெறுமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. அதற்கு அப்பெண் மறுத்ததால், அவரை வீட்டிலியே வைத்து கொலை செய்துவிட்டு நேத்ராம் தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடிய நபரை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர். ஒரே வாரத்தில் இரண்டு நபர்கள் ஜாமீனில் வெளியே வந்து குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன்..! மீண்டும் சிறையில் அடைத்தது போலீஸ்..! என்ன நடந்தது?