நிர்வாணமாக வரச்சொல்லி மிரட்டிய வாலிபர் - ரவுண்டு கட்டி தூக்கிய போலீஸ்
ஆபாசமாக சித்தரித்த புகைப்படங்கள் அனைத்தையும் உன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன், சமூக வலைதளத்திலும் வெளியடுவேன் என்று மிரட்டியுள்ளார்

புதுச்சேரியில் மாடலிங் பெண்ணை நிர்வாண வீடியோ காலில் வரசொல்லி மிரட்டிய வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் கல்லுாரி மாணவி ஒருவர் பியூட்டிஷியன் மாடலிங் செய்து வருகிறார். அவர் தன்னுடைய புகைப்படங்களை இனஸ்டாகிராமில் பதிவிட்டார். அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம் மூலம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஆபாச வார்த்தைகளால் வர்ணிக்கப்பட்டு இருந்தது.
சிறிது நேரத்தில் அவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பேசிய மர்ம நபர் என்னுடன் நிர்வாணமாக வீடியோ கால் பேச வேண்டும். இல்லை என்றால் ஆபாசமாக சித்தரித்த புகைப்படங்கள் அனைத்தையும் உன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன், சமூக வலைதளத்திலும் வெளியடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மர்ம நபர் சித்தரிக்கப்பட்ட மாணவியின் புகைப்படத்தை அவரது நண்பர்கள் சிலருக்கு அனுப்பியது தெரிய வந்தது. விசாரணையில், அந்த வாலிபர் கடலுார் மாவட்டம், திருவாமூர் பகுதியை சேர்ந்த ரூப சந்துரு, 25, என்பதும், தற்போது பண்ருட்டியில் தங்கி உள்ள அவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரியவந்தது. தனிப்படை போலீசார் பண்ருட்டிக்கு விரைந்து, அவரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர் கடந்த சில ஆண்டுகளாக இதே போல் பல பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவர்களுக்கு அனுப்பியுள்ளார். பின்னர் அவர்களை மிரட்டி ஆபாசமாக பேசியதும், அதன் மூலம் பதிவு செய்த வீடியோக்களை மீண்டும் அவர்களுக்கு அனுப்பி தொந்தரவு செய்ததும் தெரியவந்தது. அவரது செல்போனை ஆய்வு செய்த போது அதில் 32 பெண்களின் புகைப்படம், வீடியோ இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

