எம்.எல்.ஏ.,விடம் ரூ. 15 லட்சம் மோசடி; புரட்சி பாரதம் மாநிலத் தலைவர் கைது!
புதுச்சேரியில் சுயேச்சை எம்.எல்.ஏ.,விடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்த, புரட்சி பாரதம் கட்சியின் மாநிலத் தலைவர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி மாநிலம், திருபுவனை (தனி) தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன். கடந்த ஜனவரி 2ம் தேதி, புதுச்சேரி கோவிந்தசாலையைச் சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் மாநில தலைவர் ரவி என்கிற புரட்சி ரவியை சந்தித்தார்.அப்போது ரவி, தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும், தன்னுடன் கூட்டு சேர்ந்தால் அதிக லாபம் தருவதாக கூறியுள்ளார்.இதை நம்பி, ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள ரவி அலுவலகம் சென்ற அங்காளன் எம்.எல்.ஏ., ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்ய ரூ. 15 லட்சம் பணத்தை ரவியிடம் கொடுத்துள்ளார்.
இந்த பணத்தில், திருச்சி நெடுஞ்சாலை, பரிக்கலில் உள்ள நிலம், புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள இடத்தை வாங்க ஒப்பந்த பத்திரம் தயாரித்து, அங்காளனிடம் கையெழுத்து வாங்கி சென்றார்.ஆனால், நில உரிமையாளரிடம் கையெழுத்து வாங்கி, ஒப்பந்த பத்திரம் வழங்கப்படவில்லை. பல முறை ஒப்பந்த பத்திரம் கேட்டும் ரவி வழங்கவில்லை.அதனால் அங்காளன் எம்.எல்.ஏ., கடந்த 20ம் தேதி பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார்.
திருபுவனை தொகுதி எம்.எம்.ஏ. அங்காளன் புகார் மனு அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஜனவரி மாதம் முன்னாள் எம்.பி.யின் கார் டிரைவர் ஜெயராமன் என்பவர் கோவிந்தசாலையை சேர்ந்த ரவி என்பவரை புரட்சி பாரதம் கட்சியின் மாநில தலைவர் என்று அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் ரியல் எஸ்டேட் (நில வணிகம்) செய்வதாகவும், தனக்கு தொழில் கூட்டு சேர யாராவது இருந்தால் நல்ல லாபம் தருவதாகவும் கூறினார். இதை நம்பிய நான், ரவியை ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினேன். அதன்படி நானும் ரியல் எஸ்டேட் செய்ய சம்மதித்து ரூ.15 லட்சத்தை அவரிடம் கொடுத்தேன்.
அதன்படி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை பரிக்கல் பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு உடன்படிக்கை செய்ததாக பத்திரத்தை தயார் செய்து என்னிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டார். பினனர் இடத்தின் உரிமையாளரிடம் கையெழுத்து பெற்று வந்து அந்த நகலை என்னிடம் தருவதாக கூறினார். ஆனால் இதுவரை பெற்று தரவில்லை. நிலவணிகம் செய்து லாபம் ஈட்டி தருவதாக கூறி என்னை நம்ப வைத்து ரூ.15 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளனர். என்னை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ரவி மீது மோசடி வழக்கு பதிந்து, இன்ஸ்பெக்டர் கண்ணன் தேடி வந்தார். புதுச்சேரி கோவிந்தசாலையில் இருந்த ரவியை பெரியக்கடை போலீசார் கைது செய்தனர். அவரது கார் மற்றும் போலி பத்திரங்களையும் பறிமுதல் செய்தனர். கொரோனா பரிசோதனைக்கு பிறகு, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட ரவி, காலாப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். ரவி மீது முதலியார்பேட்டையில் மோசடி வழக்கு, ஒதியஞ்சாலை போலீசில், நிலம் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய புகார் விசாரணையில் உள்ளது.