(Source: ECI/ABP News/ABP Majha)
புதுச்சேரி: வாணரப்பேட்டை இரட்டை கொலை வழக்கில் வெடிகுண்டு கொடுத்து உதவியதாக 5 பேர் கைது
புதுவை வாணரப்பேட்டை இரட்டை கொலை வழக்கில் வெடிகுண்டு கொடுத்து உதவியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்
புதுச்சேரி வாணரப்பேட்டை இரட்டை கொலை வழக்கில் வெடிகுண்டு கொடுத்து உதவியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாம் ரவி (33). இவர் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தனது நண்பர் அந்தோணி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், பாம் ரவி, அந்தோணியை வழிமறித்து நாட்டு வெடிகுண்டுகள் வீசி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.
புதுவையில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை தொடர்பாக முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காலாப்பட்டு ஜெயிலில் உள்ள வினோத், தீனு ஆகியோர் தூண்டுதலின் பேரில் கூலிப்படையினர் உதவியுடன் அவரது கூட்டாளிகள் கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இரட்டை கொலைக்கு உதவியாக இருந்தவர்கள், கூலிப்படையினர் தங்க இடம் கொடுத்தவர்கள் என வினோத்தின் தாய் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பிரவீன், அருண் ஆகிய 2 பேரும் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து முதலியார்பேட்டை போலீசார் அவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து கொடுத்தது லாஸ்பேட்டை நெருப்புக்குழியை சேர்ந்த தேவராஜ் (26), மடுவுபேட் வெங்கடேஷ்(24), புதுப்பேட் சதீஷ்குமார் (28), லாஸ்பேட்டை திவாகர் (28), சாரம் லட்சுமிநகர் மித்துன் குமார் (28) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 5 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து அவர்களது வீட்டில் ஏதாவது ஆயுதங்கள், வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தினர். இதில் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக மேலும் 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய கூலிப்படையை சேர்ந்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்