Crime: அரசியல்வாதியின் பாலியல் குற்றம்: ஒளிப்பதிவாளர் கொலை - பெண் இணையதள ஆசிரியர் கைது!
ஒடிசா மாநிலத்தில் ஒளிப்பதிவாளர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் ஒளிப்பதிவாளர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசாவின் சம்பூர்ணா செய்தியின் புகைப்படக் கலைஞரான 28 வயதான மனாஸ் ஸ்வைன், பிப்ரவரி 7 ஆம் தேதி பத்ரக் மாவட்டத்தில் உள்ள சந்த்பாலி பகுதியில் உள்ள திருமண விழா ஒன்றில் வீடியோ கவரேஜிற்காக சென்றுள்ளார். அதன் பிறகு ஸ்வைன் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பிப்ரவரி 14 அன்று சந்த்பாலி காவல்துறையில் காணவில்லை என்று புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 373 மற்றும் 34 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் கடந்த மார்ச் 12 ஆம் தேதி, நாயகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நெல் வயலில் இருந்து ஸ்வைனின் சிதைந்த உடல் மீட்கப்பட்டது.
மனாஸ் ஸ்வைன்
இது தொடர்பாக ஸ்வைன் பணியாற்றிய சம்பூரணா செய்தியின் ஆசிரியர் ஷர்மிஸ்தா ரௌட் மற்றும் சிலர் விசாரணைக்காக அழைத்துவரப்பட்டனர். இதில் முதலில் அழைக்கப்பட்ட சர்மிஷ்தா ரௌத் முழுமையான ஆதாரம் இல்லாததால் முதலில் விடுவிக்கப்பட்டார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேர், ஸ்வைனை கொலை செய்ய சொன்னதின் பேரில்தான் அவரை கொன்றோம் என ஒப்புக்கொண்டதும் இந்த வழக்கில் சர்மிஷ்தா மீண்டும் சிக்கிக்கொண்டார். அதன் பிறகு 45 நாட்களாக தலைமறவாக இருந்த சர்மிஷ்தா மற்றும் அவரது கூட்டாளி ஜுனா போய் ஆகியோர் மாவட்டத்தின் நலங்கா பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
ரௌத் மற்றும் போய் ஆகியோர் சந்த்பாலி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (முதல் வகுப்பு) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அவர்கள் ஐந்து நாட்கள் குற்றப் பிரிவு காவலில் வைக்கப்பட்டனர். மேலும் இரண்டு இணை குற்றவாளிகள், ஓய்வு பெற்ற ஒடிசா தகவல் சேவை (OIS) அதிகாரி நிரஞ்சன் சேத்தி மற்றும் அவரது கூட்டாளி ரஞ்சன் நாயக் ஆகியோரும் குற்றப்பிரிவின் காவலுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.இதில் கைது செய்யப்பட்டவர்களில் நிரஞ்சன் சேத்தி, ஒரு காலத்தில் முன்னாள் முதல்வர் கிரிதாரி கோமாங்கின் பிஆர்ஓவாக பணியாற்றியவர்.
சர்மிஷ்தா ரௌத்
அரசியல்வாதி ஒருவரின் பாலியல் குற்றம் சம்பந்தப்பட்ட வீடியோ ஸ்வைனிடம் இருந்ததாக தெரிகிறது. அதனை ஒப்படைக்க மறுத்ததால் ஸ்வைனை வழிமறித்து முதலில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு ஒப்புக்கொள்ளாததால் அவரை ஷர்மிஸ்தாவின் காரில் வலுக்கட்டாயமாகத் ஏற்றி கடத்திச்சென்றுள்ளனர். புவனேஸ்வரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ரூட் என்பவரால் நடத்தப்படும் முதியோர் இல்லமான தயாள் ஆசிரமத்தின் முதல் மாடிக்குக் கொண்டு அழைத்துவரப்பட்ட ஸ்வைன் அங்கு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் நயாகர் மாவட்டத்தின் புதிபட்னா பகுதியில் அவரது உடலைப் புதைத்துள்ளனர். இந்த கொலை வழக்கில் சம்பூர்ணா வலைத்தள ஆசிரியர் மூளையாக செயல்ப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.