(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: ஒரே பாணியில் பல்வேறு கோவில்களில் நகை திருட்டு..! மாட்டிக் கொண்ட பூசாரி..! நெல்லையில் பரபரப்பு
இச்சம்பவத்தில் பூசாரி மகேஷ் மட்டும் தான் சம்பந்தப்பட்டுள்ளாரா? அல்லது இதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா ? என விசாரணை செய்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நாலாந்துலா கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். இவர் முதுமொத்தன் மொழி முத்தாரம்மன் கோவில் பூசாரியாக கடந்த ஒன்றரை மாதமாக பூஜை செய்து வந்தார். இந்த நிலையில் இந்த கோவிலுக்கு அதே ஊரைச் சேர்ந்த சண்முகவேல் பாண்டியன் என்பவர் நேர்த்திக்கடனாக 3 தங்க பொட்டு தாலிகளை வழங்கி உள்ளார். மறுநாள் பூஜை முடிந்ததும் அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகைகளை கழற்றித் தருமாறு கோவில் நிர்வாகி காமராஜ் கேட்டுள்ளார். உடனே பூசாரி மகேஷ் தங்க நகைகளை கழற்றி நிர்வாகி காமராஜிடம் கொடுத்துள்ளார். அப்போது நகையை பார்த்ததும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நிர்வாகி காமராஜ் பூசாரி மகேஷை அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று பூஜை செய்ய சொல்லிவிட்டு அவர் கொடுத்த நகைகளை திசையன்விளை நகை கடைகளில் சென்று சோதனை செய்துள்ளார். சோதனையில் அந்த நகைகள் அச்சு அசல் தங்க நகைகளை போல வெள்ளியில் செய்து கவரிங் முலாம் பூசப்பட்டது தெரியவந்ததுள்ளது. பின்னர் கோவிலுக்கு வந்து பார்த்தபோது பூசாரி மகேஷ் தலைமறைவாகி விட்டதும் தெரிய வந்தது. இது குறித்து கோவில் நிர்வாகி காமராஜ் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் கோவில் பூசாரி மகேஷ் தங்க நகைகளை திருடிவிட்டு, அதற்குப் பதிலாக அச்சு அசல் தங்கமுலாம் பூசப்பட்ட போலியான வெள்ளி கவரிங் நகைகளை சுவாமிக்கு அணிவித்தது தெரிய வந்தது.
இதனைடுத்து வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையில் தனிப்படை பூசாரி மகேஷை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது நாகர்கோவிலுக்கு தப்பித்துச் செல்ல முயற்சித்த அவரை நாலந்துலா கிராமத்தில் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்த எட்டேகால் ( 8 1/4 ) சவரன் தங்க நகைகளை மீட்டனர். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூபாய் நாற்பது லட்சம் என கூறப்படுகிறது. தொடர்ந்து குற்றவாளி மகேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பூசாரி மகேஷ் பல்வேறு கோவில்களில் பணிபுரிந்து வந்த நிலையில் அக்கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் அங்குள்ள நகைகளை ஆய்வு செய்ததில் இதே போன்று நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தில் பூசாரி மகேஷ் மட்டும் தான் சம்பந்தப்பட்டுள்ளாரா? அல்லது இதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா ? என விசாரணை செய்து வருகின்றனர். அதே போல கோவிலில் உள்ள அசல் தங்க நகைகளை போலவே இவருக்கு போலியாக நகை செய்து தருவது யார்? எனவும் போலீசார் தங்கள் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி உள்ளனர். ஒரே பாணியில் போலி நகைகளை வைத்து பல்வேறு கோவில்களில் பூசாரி ஒருவர் திருட்டில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..