Crime: மும்பையில் ஒரு நுங்கம்பாக்கம் சம்பவம்..! கூலிப்படையை வைத்து கணவனே கொன்ற கொடூரம்..! நடந்தது என்ன..?
மும்பையில் இரண்டாவது திருமண வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை, கணவனும் அவரது இரண்டாவது மனைவியும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் அமைந்துள்ளது பன்வே ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் முன்பு கடந்த 15-ந் தேதி இளம்பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசார் விசாரணையில் உயிரிழந்த பெண் பிரியங்கா ராவத் என்றும், அவருக்கு வயது 29 என்றும் தெரியவந்தது. மேலும், மும்பை, தானேவில் உள்ள பிரபல நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பிரியங்கா ராவத் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே பிரச்சினை இருந்தது கண்டறியப்பட்டது. பிரியங்கா ராவத் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கந்தேஷ்வர் காவல்நிலையத்தினர் பிரியங்காவின் கணவர் தேவ்ரத்சிங்ராவத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் அவருக்கும், நிகிதா மட்கர் என்ற பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நிகிதாவையும் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தேவ்ரத்சிங் ராவத் மும்பை, வாசியில் உள்ள பிரபல நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார். 32 வயதான தேவ்தத்சிங்கிற்கும், 24 வயதான நிகிதாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தேவ்தத்சிங் திருமணமான நபர் என்று தெரிந்தும், அவரை நிகிதா காதலித்து வந்துள்ளார். பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் யாருக்கும் தெரியாமல் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த விவகாரம் தேவ்தத்சிங் மனைவி பிரியங்காவிற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, பிரியங்கா இதுதொடர்பாக தேவ்தத்சிங்கிடமும், நிகிதாவிடமும் தனித்தனியாக விசாரித்துள்ளார். தங்களது வாழ்க்கைக்கு பிரியங்கா இடையூறாக இருப்பதாக கருதிய தேவ்தத்சிங் – நிகிதா ஜோடி பிரியங்காவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை தொடர்பு கொண்டு சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அவர்களுக்கு இந்த சம்பவத்திற்காக 3 லட்சம் ரொக்கமாக அளித்துள்ளனர்.
அந்த மூன்று பேர் தங்களது கூட்டாளிகள் மூன்று பேரை சேர்த்துக்கொண்டு மொத்தம் 6 பேர் இணைந்து பன்வே ரயில் நிலையத்திற்கு வெளியே பிரியங்கா ராவத்தை கழுத்தை அறுத்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் தற்போது தேவ்தத்சிங் – நிகிதா மட்கர் ஜோடி, கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். மற்ற மூன்று பேரைத் தேடி வருகின்றனர்.
இரண்டாவது திருமண வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை கணவனே இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.