பிரபல கஞ்சா வியாபாரி கைது : 3 டாபர்மேன் நாய்க்குட்டிகள், 2 மொபெட் வண்டி , ஏர்கன் பறிமுதல்..!
அரவிந்தன் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆந்திராவுக்கு செல்லும் சரக்கு லாரிகளை வழிமறித்து , ஓட்டுநர்களிடம் துப்பாக்கியை காண்பித்து பணம் பறித்துவந்ததையும் , போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார் .
குடியாத்தம் அருகே திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , பிரபல கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார் . அவரது வீட்டில் நடத்திய சோதனையில் , 2 மொபெட் வண்டி , 3 உயர்ரக (டாபர்மேன்) நாய்க்குட்டிகள் , வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் ஒரு ஏர்கன் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது . பரதராமி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
வேலூர் மாவட்டம் , குடியாத்தம் அடுத்த வேங்கடபுரம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் நேற்று சாலையில் நடந்து சென்றுள்ளார் . அப்பொழுது ஒரு மொபெட் வண்டியில் வந்த அதே கிராமத்தை சேர்ந்த அபி என்கிற அரவிந்தன் (22) குடிபோதையில் , அந்த மூதாட்டியை மோதுவது போல் சென்றுள்ளார் . பின்னர் அவரை கிராம மக்கள் வழிமறித்து கண்டித்தபொழுது , மதுபோதையில் ஊர் மக்களை கெட்டவார்த்தைகளில் திட்டியுள்ளார் . ஆத்திரமடைந்த கிராம மக்கள் அரவிந்தனை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பூட்டி வைத்துவிட்டு திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .
விசாரணை செய்வதற்காக வந்த பரதராமி காவல்நிலைய போலீசார் மற்றும் குடியாத்தம் குற்றங்கள் நுண்ணறிவு போலீசார் , அரவிந்தன் மது போதையில் மட்டும் இல்லாமல் , கஞ்சா போதையிலும் இருப்பதை உறுதி செய்தனர். மேலும் அவரது வீட்டில் சோதனையிட்டதில் , அரவிந்தன் அவரது வீட்டு தோட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்ப்பதும் . வீட்டில் வளர்க்கப்படும் கஞ்சா செடிகளை குற்றவாளி அரவிந்தன், குடியாத்தம் மற்றும் பெங்களூரு பகுதியில் இருக்கும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அவரது கூட்டாளிகள் உதவியுடன் விற்று வந்ததும் தெரியவந்தது .மேலும் இருசக்கர வாகனங்களை திருடி அதன் உதிரிபாகங்களை விற்று வந்ததும் தெரியவந்தது .
அரவிந்தன் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆந்திராவுக்கு செல்லும் சரக்கு லாரிகளை வழிமறித்து , ஓட்டுநர்களிடம் துப்பாக்கியை காண்பித்து பணம் பறித்துவந்ததையும் , போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார் .மேலும் ஒரு வாரத்துக்கு முன்பு அவரது கிராமத்தில் வசிக்கும் ஒரு முக்கிய நபரின் வீட்டில் இருந்து 3 டாபர்மேன் நாய்க்குட்டிகளை திருடி வந்து வளர்த்துவந்ததும் தெரியவந்தது .
அரவிந்தனிடம் இருந்து இரண்டு மொபெட் வண்டி , நாய்க்குட்டிகள் , ஏர்கன் மற்றும் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார் அரவிந்தனின் கூட்டாளியான வினோத்குமார் (26) என்பவரை கைது செய்துள்ளனர் . மேலும் தலைமறைவாக உள்ள மற்ற கூட்டாளிகளையும் கைதுசெய்ய தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் .