மயிலாடுதுறை: மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்தவர், போக்சோவில் கைது!
மயிலாடுதுறை அருகே மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள ரெட்டி கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் அன்பரசன். 23 வயதான அன்பரசன், மயிலாடுதுறை அருகே உள்ள கிராமத்தில், அப்பகுதியை சேர்ந்த உறவினர் பெண்ணான, 17 வயது உடைய பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரை அவரது பெற்றோர்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றிருந்தபோது திருமண ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் வீட்டிருக்கு திரும்பிய சிறுமியின் பெற்றோர் மகளை காணாமல் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் அதிர்ந்துபோன அவர்கள், சிறுமி காணாமல் போனது குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் வழக்குபதிவு செய்து சிறுமி காணாமல் போனது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியின் உறவினர் மகன் அன்பரசன் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியை மீட்ட மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் அன்பரசனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் சிறுமி காப்பகத்தில் விட்டு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு காட்டுப்பாடுகள் காரணமாக தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டு சரியான முறையில் இயங்காமல் உள்ளது. குறிப்பாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் குழந்தைகள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இதனால் குழந்தைகள் வீடுகளிலும், வீடுகளில் அருகிலுள்ள நபர்களை மட்டுமே நம்பி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனை தவறாக பயன்படுத்திக்கொள்ளும் வக்கிர புத்தி கொண்ட மனித வடிவிலான மிருகங்கள் குழந்தைகளை கடவுளுக்கு நிகராக எண்ணாமல், அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டல்களிலும், சிறு பிள்ளைகளுக்கு திருமண ஆசை ஏற்படுத்துவதும் என துன்புறுத்தல்களும் செய்து வருகின்றனர். உறவினர்கள், நண்பர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவை அளிப்பதில் தற்போது விதிவிலக்காக யாரும் இல்லை. குறிப்பாக இந்த கொரோனோ வைரஸ் தொற்று பரவ தொடங்கி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் முறையாக இயங்காத சூழலில் ஏராளமான பெண் குழந்தைகள் இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தொற்றின் காலத்தில் குழந்தை திருமணங்களும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு கூடுதல் முக்கியத்துவம் அளித்து இவற்றை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பல பெற்றோர்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.