மயிலாடுதுறை: நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு சக்கர வாகனங்கள் - 4 பேர் பலி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்ற விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தொடரும் போக்குவரத்து விதிமுறைகள் - அதிகரிக்கும் உயிரிழப்புகள்
அரசு, மோட்டார் வாகன விதிமுறைகளை வகுத்து, அதனை பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா? என கவனித்து அவர்களுக்கு அபராதமும், தண்டனைகளும் விதித்து வருகின்றனர். இருந்த போதிலும் மோட்டார் வாகன விதிமுறைகளை பின்பற்றாமல், அதன் காரணமாக நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விபத்துகள் மூலம் உடல் உறுப்புகள் ஊனம் ஆவது மட்டும் இன்றி, பல நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை ஒவ்வொருவரும் உணர்ந்து, அதற்கு தக்கவாறு மோட்டார் வாகன விதிகளை பின்பற்றினால் மட்டுமே விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும்.
மயிலாடுதுறை அருகே நடைபெற்ற கோர விபத்து
கடலூர் மாவட்டம் பஞ்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் முகமது ஷகின், ஹரி, ஆகாஷ். இவர்கள் மூவரும் நாகப்பட்டினத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு இன்று திரும்பி கடலூருக்கு கேடிஎம் பைக்கில் ஒரே இருசக்கர வாகனத்தில் மூவரும் பயணித்துள்ளனர். அப்போது தரங்கம்பாடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அங்குங தனியார் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த தரங்கம்பாடியை சேர்ந்த ஜவுளி கடை உரிமையாளர் ஸ்ரீதர் என்பவர் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளனர். இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து 3 பேரும் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்துள்ளனர்.
விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 3 பேர்
அப்போது எதிரே செங்கல்லை ஏற்றி வந்த டிராக்டர், கீழே விழுந்த மூவர் மீது ஏறி இறங்கியுள்ளது. அதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி மூன்று இளைஞர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த மற்றொரு வாகனத்தில் வந்த ஸ்ரீதரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் விசாரணை.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொறையார் தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் இறந்த நபர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் அடிபட்டு எழும்பு முறிவு ஏற்பட்ட ஶ்ரீதர் மேல்சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொறையார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்து மூன்றுபேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.