டாக்டரின் அலட்சியத்தால் பறிபோன பிஞ்சு உயிர் - மயிலாடுதுறையில் சோகம்
பிரசவத்தின்போது அலட்சியமாக செயல்பட்டதால் குழந்தை உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்தின்போது அலட்சியமாக செயல்பட்டதால் குழந்தை உயிரிழந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவரை மாவட்ட சுகாதார இயக்குனர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
வலியால் துடித்த கர்ப்பிணி பெண்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் முருகேசன் சிவரஞ்சனி தம்பதியினர். நிறைமாத கர்ப்பிணியான சிவரஞ்சனி, கடந்த 2 -ம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது சிவரஞ்சனி வலியால் துடித்ததாகவும், அதனால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவரிடம் உறவினர்கள் வலியுறுத்தியதாகவும், அதனை மருத்துவர்கள் ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
மூச்சி பேச்சு இன்றி பிறந்த குழந்தை
இந்த சூழலில் கடந்த 6-ம் தேதி சிவரஞ்சனிக்கு பேச்சு மூச்சு இன்றி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனை தொடர்ந்து 6 மணி நேரம் குழந்தையை பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துள்ளனர். ஆனால் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக கடந்த 7 -ஆம் தேதி சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்துள்ளனர்.
குழந்தையின் சடலத்துடன் சாலைமறியல்
இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த குழந்தை, நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அடுத்து சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து நேராக குழந்தையின் உடலுடன் மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாமல் தாமதப்படுத்தியதால் தான் குழந்தை இறந்ததாகக் குற்றம் சாட்டி, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனை எதிரே குழந்தையின் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இறந்த குழந்தையின் பெற்றோர் உறவினர்கள் குழந்தையின் சடலத்துடன் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். பல மணி நேரத்தை கடந்தும் நடைபெறும் இப்போராட்டத்தால் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி, வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா, ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட மருத்துவரை பணிநீக்கம் செய்வதாக மாவட்ட சுகாதாரத் துறை பணிகள் இணை இயக்குநர் பானுமதி அறிவித்த நிலையிலும், அதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை வைத்தனர்.
மருத்துவர் பணியிடை நீக்கம்
தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட சுகாதாரத் துறை பணிகள் இணை இயக்குநர் பானுமதி உத்தரவிட்டார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் மயிலாடுதுறை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
தமிழகத்தில் கடைசி 38 ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டு மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக மயிலாடுதுறை மாவட்டம் தரம் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்டிட வசதிகள் தொழில்நுட்ப வசதிகள் என பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. ஆனால் தொழில்நுட்ப வல்லுனர்கள், லேப் டெக்னீசியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பு ஊழியர்களும் இம்மருத்துவமனையில் தொடர்ந்து பற்றாக்குறையாகவே இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க முடியாமல் இந்த மருத்துவமனை பெயரளவில் செயல்பட்டு வருவதாகவும், இதனால் இங்கு அழிக்கப்படும் சிகிச்சையால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர். மேலும் இனிவரும் காலங்களில் ஆவது அரசு ஏழை எளிய மக்கள் மருத்துவ வசதி பெறும் மருத்துவமனையில் கவனம் செலுத்தி, மக்களின் உயிர் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் விரைந்து மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.