Crime: மயிலாடுதுறையில் பிரபல நடன கலைஞர் மீது தாக்குதல் - வீடியோ வெளியாகி பரபரப்பு
மயிலாடுதுறையில் வீட்டில் குடியிருப்பவர்களிடையே ஏற்பட்ட தகராறில் நாடக கலைஞரும் அவரது மகனையும் வீட்டு வாசலில் 5 பேர் கொண்ட கும்பல் தாக்கும் சம்பவத்தின் பரபரப்பு வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது .
மயிலாடுதுறையில் வீட்டில் குடியிருப்பவர்களிடையே ஏற்பட்ட தகராறில் பிரபல நாடக கலைஞரும் 12வது வகுப்பு படிக்கும் அவரது மகனையும் வீட்டு வாசலில் 5 பேர் கொண்ட கும்பல் தாக்கும் சம்பவத்தின் பரபரப்பு வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பசுபதி தெருவில் வசித்து வருபவர் கிங் பைசல். பிரபல நாடக இசைக் கலைஞரான இவர் மயிலாடுதுறை மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார். மயிலாடுதுறை நகரில் பசுபதி தெருவில், வாடகை வீட்டில் மேல் பகுதியில் இவர் குடியிருந்து வருகிறார். அதே வீட்டில் கீழ்ப்பகுதியில் குடியிருந்து வரும் செல்வம் மற்றும் அமுதா தம்பதியினர் இடையே வாகனங்களை நிறுத்துவது வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது தொடர்பாக சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினையில் செல்வம் மற்றும் அமுதாவிற்கு ஆதரவாக மயிலாடுதுறை முக்குலத்தோர் பாசறை நகர செயலாளர் முரளி, குணசேகர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு கிங் பைசலின் வீட்டு வாசலில் கிங் பைசலை வழிமறித்து நடுரோட்டில் இழுத்து தள்ளி சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும், உருட்டு கட்டைகள் போன்ற ஆயுதத்தாலும் தாக்கியுள்ளனர். இதனை தடுக்கச் சென்ற கிங் பைசலின் மகன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனான யாசின் மீதும் ரவுடி கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த கிங் பைசல் மற்றும் அவரது மகன் யாசின் ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளுடன் நாடக கலைஞர் கிங்பைசல் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தற்போது கிங் பைசல் அவரது வீட்டின் முன்பு தாக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல்துறையினர் 506(1), 323, 294 ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள குணசேகரன், முரளி, செல்வகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.