ஆம்புலன்ஸ் மீது மோதிய லாரி..நோயாளி பரிதாப பலி..! மயிலாடுதுறை அருகே சோக சம்பவம்
மயிலாடுதுறை அருகே நடைபெற்ற வாகன விபத்தில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் சென்ற நோயாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மயிலாடுதுறை அருகே நடைபெற்ற வாகன விபத்தில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் சென்ற நோயாளி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் உறவினர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சிவராமபுரம் பேருந்து நிறுத்தம் அருகில், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூருக்குச் சென்ற ஆம்புலன்ஸ் மீது அடையாளம் தெரியாத லாரி மோதியதில், ஆம்புலன்ஸில் பயணித்த நோயாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலத்த காயமடைந்துள்ளனர்.

சோகம் நிறைந்த பயணம்
மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் 70 வயதான பன்னீர்செல்வம். இவர் கடந்த சில நாட்களாக மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல தனியார் ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து அதன் மூலம் பன்னீர்செல்வத்தை அழைத்து சென்றனர்.

ஆம்புலன்ஸில் பன்னீர்செல்வம் உடன் அவரது மனைவி ஜானகி அம்மாள் மற்றும் மருமகன் ஆனந்தன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். ஆம்புலன்ஸை நக்கம்பாடியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பாபு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் குத்தாலம் சிவராமபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதத்தில் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது.
அடையாளம் தெரியாத லாரி மோதல்
சிவராமபுரம் பேருந்து நிறுத்தம் அருகில், ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்று திடீரென ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதியது. லாரி மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸின் முன்பகுதி முழுவதுமாக நசுங்கி சுக்கு நூறாணது, அதன் பிறகு, லாரியை நிறுத்தாமால், அதன் ஓட்டுநர் அங்கிருந்து லாரி ஓட்டி சென்று தப்பியுள்ளார்.

விபத்தில் ஆம்புலன்ஸில் பயணித்த பன்னீர்செல்வத்திற்கு விபத்து காரணமாக தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி ஜானகி அம்மாள் மற்றும் மருமகன் ஆனந்தன் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாபுவுக்கு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
காவல்துறையினர் தீவிர விசாரணை
விபத்து குறித்து தகவல் அறிந்த குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் துணை ஆய்வாளர் ரகுராமன் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த பன்னீர்செல்வத்தின் உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சேதமடைந்த வீடு
காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து, வழக்கு பதிவு செய்து, அடையாளம் தெரியாத லாரி ஓட்டுநரையும், லாரியையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த முருகவேல் என்பவரின் வீட்டின் முன்பக்கமும் சேதமடைந்துள்ளது. குறிப்பிடத்தக்கது.






















