வெளியூர் சென்று திரும்பிய கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - மயிலாடுதுறை அருகே சோகம்
மயிலாடுதுறை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் அவர் அணிந்திருந்த 14 சவரன் நகைகள், 50 ஆயிரம் பணம் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில், அவர் அணிந்திருந்த 14 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியாக வசித்து வந்த தம்பதியர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் கிராமத்த்தில் உள்ள மெயின் ரோட்டில் வசித்து வருபவர் 64 வயதான பஜில் முகமது. இவரது மர்ஜானாபேகம். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் முதல் மகன் மகதீர், திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். இரண்டாவது மகன் அகமது பாரீஸ் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். மேலும், மூன்றாவது மகன் முகமது அஜ்மல் சென்னையில் உயர்கல்வி பயின்று வருகிறார்.
சோபாவில் இறந்து கிடந்த மனைவி
இந்நிலையில், பஜில் முகமது மயிலாடுதுறைக்குச் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, மனைவி மர்ஜானா பேகம் சோபாவில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பஜில் முகமது பின்னர், அருகில் இருந்த மருத்துவரை அழைத்து வந்து பார்த்துள்ளார், அப்போது அவர் பரிசோதனை செய்த மருத்துவர் மர்ஜானா பேகம் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
காணாமல் போன தங்க ஆபரணங்கள் மற்றும் பணம்
இதனை அடுத்து, இதுகுறித்து பஜில் முகமது பொறையார் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் மற்றும் பொறையார் காவல் ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது மனைவி கழுத்திலும் கையிலும் அணிந்திருந்த 14 பவுன் நகை மற்றும் பீரோவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை திருடு போயுள்ளதாக பஜில் முகமது தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 மாணவிகளின் ரீல்ஸ் மோகம்; வகுப்பு ஆசிரியைக்கு சோகம்- பின்னணி இதுதான்!
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு
இதனைத் தொடர்ந்து, இச்சம்பம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர், நாகப்பட்டினத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்பநாய் வீட்டின் அருகிலேயே சென்று வீட்டைச் சுற்றி வந்து அங்கேயே நின்றுவிட்டது. தொடர்ந்து சோதனைகள் முடிந்து இறந்த மர்ஜானா பேகம் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
தீவிர விசாரணையில் காவல்துறை
மேலும், பஜில் முகமது குடும்பத்தாரிடமும், அப்பகுதியில் உள்ளவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மர்ஜானா பேகம் உடலில் பெரிய அளவில் காயங்கள் இல்லாத நிலையில், கொள்ளை அடிப்பதற்காக அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மருத்துவர்கள் அளிக்கும் பிரேத பரிசோதனையின் அறிக்கையின் அடிப்படையில் தான் முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.