பிளஸ் 2 மாணவிகளின் ரீல்ஸ் மோகம்; வகுப்பு ஆசிரியைக்கு சோகம்- பின்னணி இதுதான்!
பள்ளி வளாகத்திலேயே, காகிதத்தைக் கொண்டு மாலை செய்துள்ளனர். அதைக் கழுத்தில் அணிவித்து, வயிற்றில் துணியைச் சுற்றி கர்ப்பிணியாகக் காட்டியுள்ளனர்.
வேலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு வளைகாப்பு செய்த ரீல்ஸ் வைரலான லையில், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வளைகாப்பு அழைப்பிதழ் உருவாக்கம்
வேலூர் மாவட்டம், கடையநல்லூர் அருகே அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் பிளஸ் 2 மாணவிகள் சிலர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்துள்ளனர். மேலும் புதிதாக சில ரீல்களைப் பதிவிட்டு பிரபலமாக முடிவு செய்துள்ளனர்.
அதற்கான சக மாணவிக்கே போலியாக வளைகாப்பு செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கென டிஜிட்டல் அழைப்பிதழையும் உருவாக்கி உள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவி, ஆண் ஒருவரின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நலங்கு வைத்து ஆரத்தி
தொடர்ந்து பள்ளி வளாகத்திலேயே, காகிதத்தைக் கொண்டு மாலை செய்துள்ளனர். அதைக் கழுத்தில் அணிவித்து, வயிற்றில் துணியைச் சுற்றி கர்ப்பிணியாகக் காட்டியுள்ளனர். தொடர்ந்து திருநீறு, சந்தனம் ஆகியவற்றை முகத்தில் பூசி நலங்கு வைத்து, ஆரத்தி காட்டியுள்ளனர். இதுதொடர்பாக வீடியோ பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர்.
இந்த ரீல்ஸ் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முதன்மைக் கல்வி அலுவலர் விளக்கம் கேட்பு
அதேபோல நிகழ்வு குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாணவிகளின் பைகளை சோதிக்க வேண்டும்
மேலும் பள்ளிக்கு மாணவிகள் செல்போன், கத்தி உள்ளிட்ட பொருட்கள் எடுத்து வருகிறார்களா என்று பரிசோதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆசிரியர்கள் வகுப்பறையிலேதான் இருக்க வேண்டும் என்றும் பள்ளிகளில் ஏதேனும் நடந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே பொறுப்பு எனவும் முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.