Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Tirupati Laddu Controversy: திருப்பதி கோயிலில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக, லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.
![Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு Tirupati Laddu Controversy Know history how srivari laddu is made different types of tirumala tirupati laddus all details Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/7735d18ecceec6a4d73b22984b28510f1721924407921310_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Tirupati Laddu: சர்ச்சைகளுக்கு மத்தியில் திருப்பதி லட்டு பிரசாதம் உருவான வரலாறு குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
திருப்பதி லட்டு பிரசாதம் - வெடித்த சர்ச்சை:
திருப்பதி-திருமலை என உச்சரித்தாலே அங்கு வீற்றிருக்கும் பெருமானுக்கு அடுத்தபடியாக, அனைவருக்கும் நினைவில் வருவது பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் லட்டு பிரசாதம் தான். ஸ்ரீ வாரி லட்டு என்றும் அழைக்கப்படும், வாயில் எச்சிலை ஊறவைக்கும் இந்த சுவைமிக்க உணவிற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய பெரும் பாரம்பரியத்தை கொண்ட லட்டு பிரசாதத்தை சுற்றி தற்போது, பூதாகரமான சர்ச்சை வெடித்துள்ளது. பெருமானுக்கு நெய்வேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு முந்தைய ஜெகன் மோகன் ஆட்சி நிர்வாகமே காரணம் என சாடியிருக்கிறார். இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த திருப்பதி லட்டு பிரசாதம் எப்படி உருவானது என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு வரலாறு
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி கோயிலில் அறிமுகமான லட்டு பிரசாதம், அதன் தனித்துவமான சுவை மற்றும் வடிவத்திற்காக கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 2, 1715ம் ஆண்டு முதல்முறையாக இந்த பிரசாதம், திருப்பதி கோயிலில் அறிமுகமானதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இது கோயில் அதிகாரிகளால் வெங்கடேஸ்வராவின் மலைக் கோயிலில் தயாரிக்கப்பட்டது. தற்சமயம் நாம் பார்க்கும் லட்டு, 1940 ஆம் ஆண்டு மெட்ராஸ் அரசாங்கத்தின் கீழ் கிட்டத்தட்ட 6 முறை மாறுதலுக்கு உட்படுத்தப்பட்ட பின், அதன் இருப்பையும் வடிவத்தையும் உறுதி செய்தது. பண்டைய கல்வெட்டுகளின்படி, 1480-களிலேயே லட்டு இருந்தது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அந்த காலகட்டங்களில் அது "மனோஹரம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
லட்டுவிற்கு புகழ் சேர்த்த ”கல்யாணம் ஐயங்கார்”
புகழ்பெற்ற திருப்பதி லட்டுவை, பெருமானுக்கு இணையான புகழை எட்டச் செய்தவர், “லட்டு சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்பியவராக”அங்கீகரிக்கப்படும் கல்யாணம் ஐயங்கார் ஆவார். புசித்தவர் மறக்க முடியாத சுவையுடன் திருப்பதி லட்டுவை தயாரித்த இவரது இயற்பெயர் ஸ்ரீனிவாச ராகவன். ஏராளமான ஏழைகளின் திருமணங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ததன் விளைவாக, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ராஜாஜி, ஸ்ரீனிவாச ராகவனுக்கு கல்யாணம் ஐயங்கார் என பெயர் சூட்டினார். லட்டு செய்முறையை செம்மைப்படுத்துவதிலும், லட்டு தயாரிக்கும் மிராசிதாரி அமைப்பை நிறுவுவதிலும் கல்யாணம் ஐயங்கார் முக்கிய பங்கு வகித்தார்.
My grandfather Sriman. Kalyanam Iyengar (1905-1976) attained Acharyan Tiruvadi this day in 1976. We remember him for each morsel of food we eat today. 🙏 to TAtha who gave Tirupati laddu to the world and loads of love to everyone around him. pic.twitter.com/VCIgvpOa74
— S V Badri (@svbadri) September 6, 2018
ஸ்ரீவாரி லட்டுவை தயாரிப்பது எப்படி?
மாவு, எண்ணெய், சர்க்கரை, நெய், உலர் பழங்கள் மற்றும் ஏலக்காய் ஆகியவை, ஸ்ரீவாரி லட்டுவை தயாரிப்பதில் முக்கியமான பொருட்களாகும். சரியாக சேமித்து வைத்தால், 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, இந்த இனிப்புகள் விறகுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டன. லட்டு சமைக்கும் பரபரப்பான பணிக்காக சுமார் 500-க்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். தயாரிப்பை ஆதரிப்பதற்காக, கோயிலின் சமையலறைகளில் எஸ்கலேட்டர் பெல்ட்கள் மற்றும் பூந்தி பெட்டிகளை நிறுவுதல் என தொழில்நுட்ப ரீதியாக சமையலறை தனிப்பயனாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பல லட்சம் லட்டுகள் தயாரிக்கும் திறன் கொண்ட அதிநவீன சமையலறைகளை திருப்பதி தேவஸ்தானம் நிறுவியுள்ளது
திருப்பதி லட்டு வகைகள்
திருப்பதியில் 3 வகையான லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அவை ஆஸ்தானம், கல்யாணோத்ஸவம் மற்றும் ப்ரோக்தம் லட்டுகள் ஆகும். குங்குமப்பூ, முந்திரி, பாதாம் ஆகியவற்றைக் கொண்டு ஆஸ்தான லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த லட்டுகள் விசேஷ சமயங்களில் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. கல்யாணோத்ஸவம், பெயருக்கு ஏற்றாற்போல், கல்யாணோத்ஸவத்தின் பக்தர்களுக்கு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்த லட்டுகள் ஒப்பீட்டளவில் பெரிய அளவில் இருக்கும். ப்ரோக்தம் லட்டுகள் பக்தர்களுக்கு பொதுவாக விநியோகிக்கப்படுவதாகும்.
புனிதம் மற்றும் மரியாதை:
கோயில் பூசாரிகள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகளால் உன்னிப்பாக மேற்பார்வையிடப்படும் தயாரிப்பு செயல்முறை, லட்டுவின் தரம் மற்றும் புனிதத்தன்மை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. திருப்பதி லட்டு 2009 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க புவிசார் குறியீட்டை (GI) பெற்றது. GI குறிச்சொல் ஸ்ரீவாரு லட்டுவின் பெயரை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பாதுகாக்கிறது. திருப்பதி லட்டு எவ்வளவு பிரபலம் என்றால், பக்தர்கள் பல மணிநேரம் வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர். 2017 ஆம் ஆண்டில், திருப்பதி லட்டுவின் முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய அஞ்சல் துறை ஒரு நினைவு அஞ்சல வெளியிட்டு அதனை கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)