Crime : தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் மயிலாடுதுறையில் கைது..
மயிலாடுதுறையில் தொடர் இருசக்கர வாகனத்தை திருட்டில் ஈடுபட்டு வந்த 2 திருடர்களை சிசிடிவி பதிவுகள் மூலம் அடையாளம் கண்டறிந்து மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை செங்கமேட்டுத்தெருவை சேர்ந்தவர் 37 வயதான ராஜ் என்பவர் கடந்த மார்ச் 14-ஆம் தேதி மாலை வெளியில் சென்று விட்டு மீண்டும் வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து மறுநாள் அதிகாலை வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ் தனது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து, பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்காததால், தனது பைக் திருடு போனதை அறிந்து, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ராஜூன் புகாரை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை காவல்துறையினர் வாகனம் காணாமல் போன பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இருசக்கர வாகனத்தை திருடியவர்கள் மயிலாடுதுறை அருகே கிளியனூர் யாசர் அராபத் தெருவை சேர்ந்த தாஜூதீன் மகன் 25 வயதான முகமது அசாருதீன் மற்றும் மயிலாடுதுறை அருகே வழுவூர் திருநாள்கொண்டச்சேரி ரயிலடி தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் 35 வயதான உத்திராபதி என்பது தெரியவந்தது. இதனை அடுத்து முகமது அசாருதீன் மற்றும் உத்திராபதி ஆகியோரை கைது செய்த மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளர் சேதுபதி மற்றும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை செய்ததில் இவர் இருவரும் இதுபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்னும் பல இருசக்கர வாகனங்ளை திருடி விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள காவல்துறையினர், விசாரணைக்கு பின்னர் இருவரையும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருட்டில் சென்ற சம்பவம் மயிலாடுதுறையில் போதிய வாகன நிறுத்த வசதி இன்றி வீட்டு வாசலில் வாகனங்களை நிறுத்தி வரும் பலருக்கு பெரும் அதிர்ச்சியும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.