Crime: வீட்டுக்குள் விட மறுத்த கணவன்.. மகனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற மனைவி.. பொதுமக்கள் அதிர்ச்சி
கர்நாடகாவில் வீட்டுக்குள் விட மறுத்த கணவனை மகனுடன் சேர்ந்து மனைவியே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கர்நாடகாவில் வீட்டுக்குள் விட மறுத்த கணவனை மகனுடன் சேர்ந்து மனைவியே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தான் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. அங்குள்ளமத்தூர் தாலுகாவில் உள்ள சபுரடோடி கிராமத்தைச் சேர்ந்தவர் உமேஷ். 45 வயதாகும் இவர் விவசாயியாக உள்ளார். அந்த கிராமத்தில் மனைவி சவிதா மற்றும் மகன் சஷாங்க் ஆகியோருடன் வசித்து வந்தார். இதனிடையே குடும்பத்தில் பிரச்சினை என்பது அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது. குறிப்பாக மனைவி சவிதாவுடன் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவிதா தன் மகன் சஷாங்கை அழைத்துக் கொண்டு உமேஷை பிரிந்து சென்றனர்.
வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் பெங்களூருவில் வசிந்து வந்தனர். இதனிடையே சவிதா மற்றும் சஷாங்க் இருவரும் நேற்று சபுரடோடி கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். தொடர்ந்து தங்களது வீட்டுக்கு செல்ல முயன்ற நிலையில், அவர்களை உமேஷ் தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும் வீட்டுக்குள் விட மறுத்ததால் இருவரும் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வாக்குவாதம் தகராறாக மாறி கைக்கலப்பானது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த உருட்டு கட்டையால் சவிதா மற்றும் சஷாங்க் இருவரும் இணைந்து உமேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனையடுத்து உமேஷை கொலை செய்துவிட்டு இருவரும் தப்பி ஓடி விட்டனர். அக்கம் பக்கத்தினர் கொலை நடந்ததை பற்றி பெசாகரஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் கொலையான உமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாண்டியா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யதீஷ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திம்மய்யா ஆகியோரும் சபுரடோடி கிராமத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் நடைபெற்ற விசாரணையில் வீட்டுக்குள் விட மறுத்ததால் இப்பிரச்சினை நடந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் சவீதா மற்றும் சஷாங்க் மீது கொலை வழக்கு பதிவு அவர்களை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் மாண்டியா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.