Crime: சேலத்தில் பிரபல டாக்டர் கடத்தல் : கூலிப்படையை ஏவினாரா பெண் ரியல் எஸ்டேட் அதிபர்...?
சுப்பிரமணியனை நேற்று முன்தினம் பட்டப்பகலில் சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் இருவர் அவரைக் காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே உள்ள புது ரோடு பகுதியை சார்ந்தவர் சுப்பிரமணியன். இவர் ஹோமியோபதி டாக்டராக இருந்து வருகிறார். இதுமட்டுமின்றி இவர் பழைய கார்களை வாங்கி விற்றும், சூரமங்கலம் பகுதியில் ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
தனது தொழிலுக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் நடத்தி வரும் என்பவரிடம் சரண்யா என்ற பெண்ணிடம் ரூபாய் 24 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கு ரூபாய் 17 லட்சம் வரை வட்டி செலுத்தியுள்ளார். ஆனால் சரண்யா அசல் மற்றும் வட்டி சேர்த்து ரூபாய் 70 லட்சம் வரை தர வேண்டும் என சுப்பிரமணியனிடம் தெரிவித்தார்.
ஆனால் சுப்பிரமணியன், அசல் மற்றும் வட்டி கொடுத்து விட்டேன். திரும்ப எதற்கு பணம் தர வேண்டும்? என சரண்யாவிடம் கேட்டுள்ளார். இதன் பின்னர் தொடர்ந்து சுப்பிரமணியனுக்கு மிரட்டல் வந்துள்ளது.
இந்த நிலையில் சுப்பிரமணியனை நேற்று முன்தினம் பட்டப்பகலில் சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் இருவர் அவரைக் காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையறிந்த சுப்பிரமணியனின் மனைவி அன்பரசி உடனே சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதாவிடம் புகார் செய்தார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் சேலம் மாநகர் துணை கண்காணிப்பாளர் மாடசாமி, சூரமங்கலம் உதவி கண்காணிப்பாளர் நாகராஜன், சூரமங்கலம் காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் காவல்துறையினர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் விசாரித்து சேலத்தில் காரில் வைத்து சுப்பிரமணியனை மிரட்டி கொண்டிருந்த இரண்டு ரவுடிகளிடம் இருந்து சுப்பிரமணியனை மீட்டனர்.
பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்தி ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. சுப்பிரமணியனை கடத்திய கூலிப்படையை சேர்ந்த டேவிட் என்கிற உதயகுமார் (37) மற்றும் குமார் (31) ஆகிய இருவரை கந்தம்பட்டி மயானத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள டேவிட் சில வருடங்களுக்கு முன்பு சேலம் ஜெயில் வார்டன் ஒருவரை தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார். தற்போது கூலிப்படை போல் டேவிட் செயல்பட்டு வந்துள்ளார். கூலிப்படையை ஏவிய ரியல் எஸ்டேட் அதிபர் சரண்யாவையும் காவல்துறையினர் விசாரிக்க முடிவெடுத்துள்ளனர்.