மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை; கேரள ஐபிஎஸ் மகன் கைது
மெத்தம்பெட்டமைனை வாங்கி, இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களை குறிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் அனைத்து வளங்களும் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான நிலப்பகுதி வனம் மற்றும் நீர்நிலைகள் நிறைந்தவையாக திகழ்கிறது. மேலும் பல பிரசித்தி பெற்ற கோவில்கள் அங்கு இருப்பதால் கடவுளின் தேசம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட பெருமைகள் நிறைந்த கேரளாவில் சமீபகாலமாக போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மட்டுமன்றி சட்டவிரோத போதை மருந்தாக இருக்கும் எம்.டி.எம்.ஏ. பயன்பாடும் அதிகமாக இருக்கிறது என புகார் எழுந்து வந்தது. வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் கடத்தல்காரர்களிடம் கோடிக்கணக்கில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் சிக்குவதே அதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். போதைப் பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்களை குறி வைத்து மெத்தம்பெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக கேரள ஐபிஎஸ் அதிகாரி ஒருவரது மகன் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு என்ற தனிப்பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவு போலீஸார் சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய போலீஸாருடன் ஒருங்கிணைந்து கண்காணித்து வருகின்றனர்.
அதன்படி, நுங்கம்பாக்கம் போலீஸார் கடந்த மாதம் 2-ம் தேதி காலை நுங்கம்பாக்கம் டிபிஐ எதிரில் உள்ள கல்லூரி சந்தில் கண்காணித்தபோது, 4 பேர் சந்தேகப்படும்படி நின்றிருந்தனர். அவர்களிடம் சென்று போலீஸார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதித்தபோது அதில் மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார் ஸ்ரீஜித், ஹரிகிருஷ்ணன் மற்றொரு ஹரிகிருஷ்ணன், பெருமாள் ஆகிய 4 இளைஞர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10.05 கிராம் மெத்தம்பெட்டமைன், 4 செல்போன்கள், 1 லேப்டாப், ரூ.6 ஆயிரம், ஒரு இருசக்கர வாகனம், 12 சிரஞ்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தலைமறைவாக இருந்த கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுனிஷ்(32), அதே பகுதியைச் சேர்ந்த நிகில்(32) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 10.5 கிராம் மெத்தம்பெட்டமைன், 1 செல்போன் மற்றும் 1 லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மெத்தம்பெட்டமைனை வாங்கி, இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களை குறிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாகவும், தற்போது கைது செய்யப்பட்ட நிகில் கேரளாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவரது மகன் என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.





















