Crime : உறவினர் பெண்ணுக்கு 5 ஆண்டுகளாய் பாலியல் வன்கொடுமை..பலமுறை கருக்கலைப்பு..காவல்துறை ஆய்வாளரின் அராஜகம்...!
உமேஷ் தன்னை பலமுறை வற்புறுத்தி மாத்திரைகள் சாப்பிட வைத்து கருவை கலைக்க வைத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டி உள்ளார்.
கர்நாடக சித்ரதுர்காவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது உறவினரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரை பல முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததற்காக காவல்துறை ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜி. பி. உமேஷ் என்ற குற்றம்சாட்டப்பட்டவர் மீது அவரது 25 வயது உறவினர் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தப்பி ஓடிவிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில், தங்கள் குடும்பத்தில் நிலத் தகராறு நிலவி வருவதாகவும், தனது தாயின் வேண்டுகோளின் பேரில் உமேஷ் காவல்துறை ஆய்வாளராக நியமிக்கப்பட்டு 2017இல் இப்பிரச்னையை தீர்க்க உதவினார் என்றும் குறிப்பிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை, தான் காவல்துறை ஆய்வாளராக நியமிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சந்திப்பதற்காக வர சொல்லி இருக்கிறார்.
கடந்த 2017ஆம் ஆண்டு, செப்டம்பர் 13ஆம் தேதி அன்று உமேஷை சந்திக்கச் சென்றபோது, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதை யாரிடமும் சொல்ல வேண்டாம், இல்லையெனில் அவரது குடும்பத்தையே அழித்துவிடுவேன் என மிரட்டி உள்ளார்.
உமேஷ் தனக்கு அடிக்கடி போன் செய்வதாகவும், ஆனால், அவரின் போன் காலை ஏற்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். கடைசியாக, அவரது வீட்டிற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க தொடங்கி இருக்கிறார். அவருக்கு பயந்து, பாதிக்கப்பட்ட பெண் வேறு இடத்தில் பணி செய்திருக்கிறார்.
ஆனால், அங்கும் வந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார் உமேஷ். அவருக்கு ஏற்கனவே, இரண்டு மனைவிகள் உள்ளனர். மேலும், தன்னை மூன்றாவது மனைவியைப் போல கூட வாழச் சொன்னதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
அக்டோபர் 2, 2021 அன்று சுகாதார மையத்தில் கருக்கலைப்பு செய்ததாகவும் மேலும், உமேஷ் தன்னை பலமுறை வற்புறுத்தி மாத்திரைகள் சாப்பிட வைத்து கருவை கலைக்க வைத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டி உள்ளார்.
தன்னைக் விட்டுவிடும்படி உமேஷிடம் அந்தப் பெண் பலமுறை கெஞ்சி இருக்கிறார். ஆனால், அவரின் அட்டூழியம் தொடர்ந்து வந்துள்ளது. மாறாக, அவர் தனக்குக் கீழ்ப்படியவில்லை என்றால், மீண்டும் ஒரு முறை நிலத் தகராறை பிரச்னையை தொடங்கி அவரடைய பெற்றோரை ரோட்டில் வர வைப்பேன் என எச்சரித்துள்ளார்.
இதையடுத்து, காவல்துறை ஆய்வாளராக உள்ள உமேஷ், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இன்னும் கைது செய்யப்படவில்லை.