Hari Nadar | ‛நான் தனி ஆளு இல்ல...’ என வலம் வந்த ஹரி நாடார்... மீண்டும் மீண்டும் கைதான கதை!
Hari Nadar : தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர், வட்டிக்கு விடுபவர் என்று பல அவதாரங்களில் இருந்தவர் பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை தியாகராய நகரில் குடியேறிவிட்டார்.
மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரி நாடாரை, நடிகை விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்திருக்கிறது திருவான்மியூர் காவல்துறை. ஹரிநாடாருக்கு அறிமுகமெல்லாம் பெரிதாகத் தேவையில்லை. இந்த பெயரைக் கேட்டாலே, கழுத்து, கையெல்லாம் கிலோ கணக்குல தங்கத்தை மாட்டிக்கிட்டு இருப்பாரே என்று உடனடியாக கேட்பார்கள். அந்த அளவிற்கு எல்லோருக்கும் பரிட்சயமானவர் தான் இந்த ஹரி நாடார்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேல இலந்தைக்குளத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ண நாடார் என்கிற ஹரி நாடார். இவரது அப்பா பெயர் அருணாச்சல நாடார். 1982ம் ஆண்டு மே 1ம் தேதி பிறந்த ஹரி நாடார் பள்ளிப்படிப்பை திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் படித்தார். 10வது வரை படித்த அவர் அதோடு படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர், வட்டிக்கு விடுபவர் என்று பல அவதாரங்களில் இருந்தவர் பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை தியாகராய நகரில் குடியேறிவிட்டார்.
கிரிமினல் குற்றவாளிகளான ராக்கெட் ராஜா, என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் சகோதரர் சுபாஷ் பண்ணையாரின் அறிமுகம் கிடைக்க அவர்களுடன் ஒட்டிக்கொண்டார். அதுவரை ஹரிநாடார் பெரிய அளவில் பிரபலமில்லை. வெளிஉலகிற்கு ஹரிநாடார் தெரியவந்தது 2016ல் அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவால் தான். ஜெயலலிதா தன்னை அடித்தார் என்றும், என்னை மிரட்டுகிறார் பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு எங்கே இருக்கிறது என்றும் நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க பேசிவிட்டு சென்னை வந்தார் சசிகலா புஷ்பா. இதனால் சசிகலா புஷ்பா மீது கடும் கோபத்தில் இருந்தார் ஜெயலலிதா என்று கூறப்படுகிறது.
இதனால் தனது சமூகத்தைச் சேர்ந்தவர் சசிகலா புஷ்பா தனியாக கஷ்டப்படுகிறாரே என்று சசிகலா புஷ்பாவின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். சுபாஷ் பண்ணையார், ராக்கெட்ராஜா ஆகியோருடன் சேர்ந்து சசிகலாவுக்கு பாதுகாப்பளித்தவர் தான் ஹரி நாடார். அப்போது நாடார் மக்கள் சக்தி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். தங்களை கொடுமைப்படுத்தியதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சசிகலா புஷ்பா வீட்டில் வேலைபார்த்து வந்த பானுமதி, ஜான்சி என்ற 2 பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் சுகந்தி ஜேசன் வீட்டை சூறையாடியதாக அளிக்கப்பட்ட புகாரில் ஹரிநாடார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்தவர் ஜெயலலிதாவின் விசுவாசியானார். அதன்பிறகு ஜெயலலிதாவை வாழ்த்தி ஊரெங்கும் போஸ்டர் ஒட்டுவது என்று அரசியலில் இறங்கிவிட்டார்.
கழுத்தில் 20 நகை. இரண்டு கையிலும் 12 ப்ரேஸ்லெட்டுகள், 8 மோதிரம் என்று நாலேகால் கிலோ தங்க நகைகளுடன் நடமாடும் நகைக்கடைபோல வலம் வர ஆரம்பித்தார் ஹரி நாடார். நாடார் சமூகத்திற்கென்று ராக்கெட் ராஜா உருவாக்கிய பனங்காட்டுப்படை என்ற கட்சியின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட இவர் 2017ல் நடைபெற்ற நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். பொதுவாக சொகுசு கார்களில் வலம் வரும் ஹரிநாடார், தேர்தல் பிரசாரத்தின் போது ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபுள்யூ, மகேந்திரா தார் போன்ற சொகுசு கார்கள் ஊர்வலமாக வர தேர்தல் பிரச்சாரம் செய்து அதிரவைத்தார். அந்த தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றாலும் அனைவராலும் கவனிக்கப்பட்டார். காரணம், சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள்பெற்று மூன்றாமிடம் பிடித்தது தான்.
கட்சி ஆரம்பித்து பங்கேற்ற முதல் தேர்தலிலேயே 3ம் இடம் பிடிக்க கட்சியை விரிவுபடுத்தத் தொடங்கினார். இதற்கிடையில் தான் இன்னொரு சிக்கலில் சிக்கினார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி ஏமாற்றிவிட்டார் என்று அடிக்கடி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார் நடிகை விஜயலட்சுமி. இந்தநிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலையில், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சீமான் தொந்தரவு தாங்க முடியவில்லை என்று கூறி தூக்கமாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இரண்டு நாள்களில் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து தர்ணாவில் ஈடுபட்ட விஜயலட்சுமி, தனது உடல் நலம் முழுமையாக சரியாகாத நிலையில், திடீரென தன்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும், சீமானுக்காக ஹரி நாடார் தன்னை மிரட்டுவதாகவும், சீமான், ஹரி நாடார் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதுதொடர்பாக, விஜயலட்சுமி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தொழிலதிபர், தயாரிப்பாளர், அரசியல்வாதி வரிசையில் மோசடி செய்பவர் என்ற வரிசையிலும் தன்னை இணைத்துக்கொண்டார் ஹரி நாடார். மோசடி வேலையை தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராஸ்டிரா, தெலங்கானா போன்ற மாநிலங்களிலும் கிளை பரப்பி செய்துவந்திருக்கிறார். தனக்கிருக்கும் தொடர்புகளைப் பயன்படுத்தி வங்கிகளிடம் பெரிய அளவில் கடன் பெற்றுத்தருவதாகவும், அதற்கு தனக்கு கமிஷன் தரவேண்டும் என்ற அடிப்படையிலும் தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்படி பெங்களூருவைச் சேர்ந்த வெங்கடரமண சாஸ்திரியிடம் கைவரிசையை காட்டியிருக்கிறார்.
வங்கியில் 360 கோடி ரூபாய் கடன் வாங்கி கொடுப்பதாகக் கூறி அதற்கான டிடியை கொடுத்துவிட்டு, கடன் பெற்றுகொடுத்ததற்கான கமிஷனாக ரூ. 7 கோடி ரூபாயை பெற்றிருக்கிறார். ஆனால் அந்த டிடி போலியானது என்பது தெரியவர தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார் சாஸ்திரி. ஆனால், பணத்தை தரமுடியாது என்று கூறியதோடு கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார் என்று ஹரிநாடார் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது புகார் அளித்தார் வெங்கடரமண சாஸ்திரி. கேரளாவில் வைத்து அவரை கடந்த வருடம் மே மாதம் கைது செய்தது காவல்துறை. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தார் ஹரி நாடார்.
இதுதான் தமிழ் சினிமா #நடிகை #விஜயலட்சுமி பேசியது!
— HARI NADAR.A (@AHARINADAR2) July 23, 2020
பொறுப்புள்ள பெண்ணுரிமை பேசும் சினிமா நடிகை விஜயலட்சுமி அவர்கள் இது போன்று சமூக வளைதலங்களில் எங்கள் #நாடார் #சமுதாய #தாயாரை #தகாத #வார்த்தைகளால் #விமர்சித்தால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்???????தாய் என்பவர்கள் ... pic.twitter.com/OwEITVIwN0
இந்த நிலையில் தான், நடிகை விஜயலட்சுமியின் தற்கொலை முயற்சி வழக்கை தூசு தட்டியிருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. ஹரிநாடாரை கைது செய்ய வேண்டும் என்று அனுமதி கேட்டு சிறைத்துறைக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் இன்று கைது செய்து தமிழ்நாடு அழைத்து வருகிறது காவல்துறை. கைது செய்யப்பட்டிருப்பது ஹரி நாடார் என்றாலும் காவல்துறை போட்டிருக்கும் ஸ்கெட்ச் அவருக்கு இல்லை என்று கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.