ஆந்திரா டூ செங்கல்பட்டு.. கஞ்சா கடத்தல் பின்னணியில் பெண்.. சிக்கியது எப்படி ?
Chengalpattu: ஆந்திராவில் இருந்து செங்கல்பட்டு பகுதிக்கு கடத்திவரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்படி 2 கிலோ 700 கிராம் கஞ்சாவுடன் பெண் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சா விற்பனையால் தொடரும் தலைவலி
தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம், விற்பனை உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை கட்டுக்குள் கொண்டு வர தமிழ்நாடு அரசு மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்திவரப்பட்டு, விற்பனை செய்வது, பயன்படுத்துவது போன்ற குற்றச் செயல்கள் அவ்வப்போது நடப்பதும், அதில் போலீசார் நடவடிக்கை எடுப்பதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. குறிப்பாக சென்னை புறநகர் மாவட்டங்களாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால், போலீசாருக்கு தலைவலி அதிகரித்து வருகிறது.
பிரபல கஞ்சா வியாபாரி
ஆந்திர மாநிலம் தடா பகுதியில் பிரபல கஞ்சா மொத்த வியாபாரியான நெல்லூர் ராஜேஷ் என்கிற கார்த்தி என்பவரிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு கிலோ கஞ்சாவை வாங்கிக்கொண்டு, தடா ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கி மின்சார ரயில் மூலம் செங்கல்பட்டு ரயில்நிலையத்திற்கு கஞ்சா எடுத்து வருவதாக அவசர போலீஸ் "100" கால்ஸ் மூலம் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து இந்த தகவலை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் படியாக நின்ற, ஒரு பெண் உள்பட இருவரை செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
2 கிலோ கஞ்சா பறிமுதல்
போலீசார் நடத்திய விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் ராஜ் (30) மற்றும் கல்பாக்கம் புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவரது மகள் சந்தியா என்கிற மகேஸ்வரி (30) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேற்கொண்டு அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஆந்திராவில் இருந்து கடத்திவரும் கஞ்சாவை திருக்கழுக்குன்றம் மற்றும் கல்பாக்கம் போன்ற பகுதியில் உள்ள இளம் வயது நபர்களிடம் விற்பனை செய்து வருவதாக தகவல் தெரியவந்தது.
இவர்கள் வழக்கமாக விற்பனை செய்யும் நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், வாயலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரதுமகன் தீனா(24) மற்றும் ராதாகிருஷ்ணன் என்பவரது விஷ்வா (24) ஆகிய இருவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது வீட்டிலிருந்து 10 கிராம் பாக்கெட் வீதம் 70 கஞ்சா பாக்கெட்டுகள் 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, 4 பேரையும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.