கொடூரமாக வெட்டப்பட்ட பெண் காவலர்..! சரணடைய வந்த கணவரை தட்டித் தூக்கிய போலீஸ்..!
Kanchipuram Crime : ஏகாம்பரநாதர் கோயில் அருகே பெண் தலைமை காவலர் ஓட விரட்டி வெட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில் அருகே பெண் தலைமை காவலர் ஓட விரட்டி வெட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கணவன் மனைவிக்கு இடையே தகராறு
காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் டில்லி ராணி. டில்லி ராணியின் கணவர் மேகநாதன். மேகநாதன் டில்லி ராணி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்பொழுது பிரிந்து வாழ்வதும் சில மாதங்கள் கழித்து சேர்ந்து வாழ்வதும் , என அவர்களுடைய வாழ்க்கை சண்டை சச்சரவுடன் இருந்து வந்துள்ளது.
ஸ்கெட்ச் போட்டு வந்த கணவர்
நேற்று டில்லி ராணி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள சாலை தெரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் பணி நிமிர்த்தமாக , சாலை தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தபொழுது, இந்தியன் வங்கி அருகே அவரது கணவர் மேகநாதன் இடைமறித்து, வாகனத்தை காலால் எட்டி உதைத்துள்ளார். இதனால் பெண் காவலரான டில்லி ராணி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
பகலில் நடந்த ஏறிய கொடூரம்
தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண் காவலரை வெட்ட மேகநாதனை வருவதை பார்த்த டில்லி ராணி, தப்பிக்க ஓடியுள்ளார். ஆனால், அவரை மேகநாதன் அவரை விடாமல் கொலை வெறியுடன் துரத்திக்கொண்டு ஓடியுள்ளார். உயிருக்கு பயந்த டில்லி ராணி அங்கிருந்த வங்கி ஏடிஎம்மில், தஞ்சமடைய முயற்சி செய்த பொழுது, இடது கையில் சரமாரியாக டில்லி ராணியை மேகநாதன் தாக்கியுள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் கத்தி கூச்சலிட்டத்தை பார்த்த மேகநாதன் அங்கு இருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.
உயிருக்கு போராடிய காவலர் - காப்பாற்றிய போலீஸ்
சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டில்லி ராணியை, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் காவலர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கணவன் மனைவிக்கு இடையே என்ன பிரச்சனை ?
கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இருவரும் அவ்வப்போது சண்டை போட்டு வந்துள்ளனர். இருவரும் அவ்வப்போது சண்டை காரணமாக பிரிந்து வாழ்வதும், தொடர்கதையாக இருந்து உள்ளது. மனைவி டில்லி ராணி விவாகரத்து பெற முயற்சி மேற்கொண்டு உள்ளார். இது குறித்து நோட்டீஸ் அனுப்பிய நிலையில், கணவர் மனைவி மீது கோபத்திலிருந்து தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மனைவி தன்னை நிராகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத கணவர், போதையில் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்று இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
தனிப்படை போலீசார் கைது
இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்த போலீசார் தப்பி ஓடிய கணவர் மேகநாதனை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.மேகநாதன் செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடிக்க முயற்சி செய்தனர்.ஆனால் செல்போனை மேகநாதன் தூக்கி வீசி விட்டு சென்றது, காவல்துறையிடம் சுனகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீசார் பல்வேறு வகைகள் விசாரணை மேற்கொண்டதில், தப்பி ஓடிய மேகநாதன் பாண்டிச்சேரியில் தஞ்சம் அடைந்தது தெரியவந்தது. தொடர்ந்து பாண்டிச்சேரி சென்று மேகநாதன் கைது செய்ய போலீசார் முயற்சி மேற்கொண்டனர். அச்சமயத்தில் மேகநாதன் அங்கிருந்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரணடைய வந்துள்ளார். இதனை அடுத்து காஞ்சிபுரத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.