Crime: கர்நாடக பெண் அரசு அதிகாரியை கொலை செய்தது ஏன்? - குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!
கர்நாடகாவில் அரசு பெண் அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Karnataka Murder: கர்நாடகாவில் அரசு பெண் அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவை உலுக்கிய கொலை:
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதிமா (47). இவர் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். இவர் சுப்ரமணியபோரா என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சனிக்கிழமை இரவு அலுவலகப் பணி முடிந்து, பெங்களூருவில் இருக்கும் சுப்ரமணியபோராவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரது கணவரும், மகனும் சொந்த ஊரான தீர்த்தஹள்ளிக்குச் சென்றிருந்தனர். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு பிரதிமாவின் சகோதரரும், கணவரும் செல்போனில் அழைத்தபோது, அவர் பதிலளிக்கவில்லை என்பதால், அவரது சகோதரர் மறுநாள் காலை பிரதிமா வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது தான் வீட்டில் பிரதிமா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து, பிரதிமாவின் சகோதரர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரதிமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருததுவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஓட்டுநர் கைது:
அப்போது, பிரதிமா அலுவலகத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணியளவில் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரை, அவரது வீட்டில் புதிய ஓட்டுநர் இறக்கிவிட்டுள்ளார். இதனால், இவரை சந்தேகத்தின் பேரில், முன்னாள் ஓட்டுநர் கிரணிடம் போலீசார் விசாரிக்க முயன்றனர். ஆனால், அவர் பெங்களூருவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாமராஜநகருக்கு தப்பிச் சென்றது தெரிந்தது. உடனே போலீசார் முன்னாள் ஓட்டுநர் கிரணை கைது செய்து விசாரித்தனர். அப்போது, "நான் பிரதிமாவின் ஓட்டுநராக ஐந்து நாட்களாக பணிபுரிந்து வந்தேன்.
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தேன். பிரதிமா, கடந்த 10 நாட்களுக்கு முன்பு என்னை பணியில் இருந்து நீக்கிவிட்டு, புதிதாக ஒருவரை பணிக்கு அமர்த்தினார். இதனால், தன்னை வேலைக்கு எடுக்கும் படி அவரிடம் முறையிட்டேன். ஆனால், அவர் பணியில் எடுக்கவில்லை. இதனால் நான் பிரதிமாவை கொலை செய்ததாக" வாக்குமூலம் அளித்தார். இதற்கு முன்னதாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், "கொலை தொடர்பாக கடுமையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இறந்தவரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க
Supreme Court: மசோதாக்களை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது - உச்சநீதிமன்றம் கருத்து..