POCSO : திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை: பள்ளி மாணவியை கடத்திய டிரைவர் கைது..!
சென்னை ஆவடியில் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோர்களுடன் வசித்து வந்த சிறுமி கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்து வழக்கம்போல வெளியே சென்றுள்ளார். ஆனால், மாணவியை நீண்ட நேரமாகியும் காணவில்லை, இதனால், அந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மகள் மாயமாகியது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் திருமுல்லைவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் விசாரணையில் இளைஞர் ஒருவர் மாணவியை அழைத்துச் சென்றது தெரியவந்தது.
பின்னர், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் தாம்பரத்தில் உள்ள கடப்பேரி முத்தமிழ் நகரைச் சேர்ந்த சஞ்சய் (வயது 19) என்பவர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்றதாக தெரியவந்துள்ளது. சஞ்சய் அந்த பகுதியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். பள்ளி மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய சஞ்சய், மாணவியை அவரது மாமா வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஆவடி காவல்நிலைய காவல் ஆய்வாளர் லதா நேற்று மாலை சஞ்சயை கைது செய்தனர். பின்னர், சஞ்சய் மீது பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், சஞ்சயை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
11ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : சீர்காழியில் 2 குழந்தைகளை கொன்று, தாயும் தூக்கிட்டு தற்கொலை! கடன் பிரச்சனையால் விபரீதம்..
மேலும் படிக்க : அமைச்சர் அன்பில் மகேஷ் பேரை சொல்லி 8.5 லட்சம் மோசடி - முருகன் சிக்கியது எப்படி? தட்டித்தூக்கிய காவல்துறை..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்