மனைவியை கொலை செய்துவிட்டு மூளை தானம்.. 12 வருடம் கழித்து சிக்கிய கணவர்.!
ஏற்கனவே கொலை குற்றத்தால் சிறையில் இருப்பதால், இந்த வழக்கிற்கும் சேர்த்து சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இங்கிலாந்தின், ஹார்ட்ஃபோர்டுஷயர் பகுதியில், 2016 ஆம் ஆண்டு, 51 வயது எழுத்தாளர் ஹெலன் பெய்லி என்பவரை கொலை செய்ததற்காக ஏற்கெனவே ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருக்கும் இயன் ஸ்டூவர்ட்டின் பழைய வழக்கான மனைவி இறந்த வழக்கை தோண்டி பார்க்கையில் அதுவும் இவர் செய்த கொலைதான் என்று தெரிய வந்ததும், சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றவாளி கொலை செய்த மனைவியின் மூளையை தானம் செய்ததனால் சிக்கிக்கொண்டார் என்று கோர்ட் தெரிவித்துள்ளது. அதாவது இறந்தவரின் மூளையை மருத்துவ ஆய்வுக்காக சிலர் தானம் செய்வார்கள். இதன் மூலமே அவர் சிக்கியுள்ளார்.
2010ஆம் ஆண்டு இயன் ஸ்டுவர்ட்டின் மனைவி வலிப்பு வந்ததால் இயற்கை மரணம் அடைந்ததாக மூடப்பட்ட வழக்கின் மேல் சந்தேகம் கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர் போலீசார். அவருடைய உடல்பாகங்கள் மருத்துவ ஆய்வுக்காக தானம் செய்யப்பட்டிருந்தது. அவரது மூளையை ஆய்வு செய்த மருத்துவர் சஃபா அல்-சராஜ், இதில் ஏதோ சரியில்லாமல் இருப்பதை உறுதி செய்தார். 63 வயதாகும் அல்-சராஜ் காவல்துறைக்காக வருடத்திற்கு 100 வழக்குகளில் ஆய்வுகள் செய்து வருகிறார். அவர் பேசுகையில், "அவர் உடலை தகனம் செய்திருந்தாலோ, மூளையை பாதுகாத்து ஆய்வுக்காக பதப்படுத்தவில்லையோ என்றாலோ, இந்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லாமல் போயிருக்கும். என் இத்தனை வருட சர்விசில் இதுபோன்று மூளையை தானம் செய்த பின்பு ஒரு வழக்கு 10 வருடம் கழித்து மீண்டும் வந்து குற்றவாளியை கண்டுபிடிக்க பயன்படுவதை பார்த்ததே இல்லை. அந்த பெண் இறப்பதற்கு சரியாக 35 நிமிடங்களுக்கு முன் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வலிப்பு என்பது இதயத்தால் உருவாகி உடலை பாதிக்கும்போது உடனடியாகத்தான் மரணம் ஏற்படும், இவ்வளவு நேரம் ஆகாது. நான் காவல் துறையினரிடம் இது ஒரு சாதாரண வலிப்பு நோய் இல்லை என்றேன், அதற்கு அவர்கள் அந்த பெண்ணுக்கு கடந்த 18 வருடங்களாக வலிப்பு வரவில்லை என்றனர். அப்போது நான் சொன்னேன், அப்போது கண்டிப்பாக இது இயற்கை மரணம் இல்லை என்று உறுதிபடுத்தினேன்." என்றார்.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகையில், வலிப்பு நோயால் இறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை, அவர் உடலிலோ, அவர் நாக்கை கடித்துக்கொண்டதற்கோ, எந்த காயமும் இல்லை என்று வழக்கறிஞர் கூறினார். மற்றொரு நிபுணர் கூறுகையில், வலிப்பு வந்ததால் மரணிப்பது என்பது லட்சத்தில் ஒருமுறை நிகழும் அரிய சம்பவம் என்று கூறினார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சைமன் ப்ரையன்,"நீங்கள் உங்கள் மனைவியின் மூளையை தானமாக கொடுத்ததே உங்கள் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. ஏற்கெனவே கொலை குற்றத்தால் சிறையில் இருப்பதால், இந்த வழக்கிற்கு சேர்த்து சாகும் வரை சிறையில் இருக்க உத்தரவிடுகிறேன். மேலும் இந்த வழக்கின் ஆதாரங்களை தேடிப்போய் மூளை தானம் செய்யப்பட்டதை கண்டறிந்து அதன் மூலம் ஆதாரங்களை கொண்டுவந்ததற்கு பாராட்டுக்கள்." என்று கூறினார்.