திமுக வட்டச் செயலாளர் கொலையில் கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர் கைது: குற்றவாளியை நெருங்கும் தனிப்படை!
தொழில் போட்டி காரணமாக இருக்கலாம் என்கிற ரீதியில் ஏற்கனவே இருவரிடம் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை மடிப்பாக்கம் திமுக 188 வது வட்ட செயலாளர் செல்வம் கொலையில், கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடசென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் கூலிப்படை தான் கொலை செயலில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில், விக்னேஷ்வர், கிஷோர்குமார், நவீன், புவனேஸ்வர், சஞ்சய் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த இவர்கள், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே காரில் சென்ற போது, சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர் கைது செய்த விக்கிரவாண்டி போலீசார், அவர்களை சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொழில் போட்டி காரணமாக இருக்கலாம் என்கிற ரீதியில் ஏற்கனவே இருவரிடம் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கொலைக்கான காரணம் என்ன?
சென்னை மடிப்பாக்கம் திமுக 188 வது வட்ட செயலாளராக இருப்பவர் செல்வம். ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் ஆகிய தொழில்களை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், செல்வத்தின் மனைவிக்கு வாய்ப்பு இருந்ததாகவும், அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என அரசியல் ரீதியாக இந்த கொலை கடும் விமர்சனத்திற்கு ஆளானது.
இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு தனிப்படையும் பிரிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலை செய்தவர்கள் பற்றிய விபரம் தெரியவந்துள்ளது. வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் கீழ் பணியாற்றும் கூலிப்படை தான் இந்த கொலையை செய்திருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
அவர்கள் கூலிக்கு செய்திருந்தாலும், செய்யச் சொன்னது யார்? காரணம் என்ன? என்பது குறித்து தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தொழில் ரீதியான போட்டியில் செல்வம் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சமீபத்தில் இடம் ஒன்று விற்பனை தொடர்பாக, செல்வத்திற்கு இருவருடன் மோதல் இருந்துள்ளது. ஒருவர், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து, அதிமுக சார்பில் வேட்பாளராக களம் கண்டவர்.
மற்றொருவர், சென்னை மடிப்பாக்கம் செம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா. இவர் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். ராதாகிருஷ்ணன் மற்றும் ராஜா மீது போலீசாருக்கு சந்தேம் எழுந்த நிலையில், திருச்சி அருகே சமயபுரம் டோல்கேட் அருகே காரில் சென்று கொண்டிருந்த ராதாகிருஷ்ணனை, தனிப்படை போலீசார் வழிமறித்து விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர். அதே போல , ராஜாவும் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.
சந்தேகத்தின் பேரில் தான் இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. ராதாகிருஷ்ணனுக்கும், ராஜாவுக்கும் தொடர்பில்லை என்றாலும், இருவரும் தனித்தனி சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதோ போல, கொலையில் ஈடுபட்ட கூலிப்படையினர் மற்றும் அவர்களை ஏவிவிட்ட பிரபல ரவுடி ஆகியோரையும் தனிப்படை தீவிரமாக தேடிவருகிறது. அவர்கள் பிடிபட்டால், கொலைக்கான காரணமும், கொலையாளியும் கண்டுபிடிக்கப்படுவார்கள்.
மெகா திட்டமா?
செல்வம் கொலையில் திட்டமிட்ட சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது. தொழில் போட்டியில் அவர் கடும் முன்விரோதம் பெற்றிருந்தார். ஆனால் அவரை குறிவைக்க சிலர் காத்திருந்தனர். உள்ளாட்சி தேர்தல் வந்ததும். அவர் சீட் பெற முயற்சி எடுப்பார் என்பதை அறிந்து, அவரை தீர்த்துக் கட்ட இது தான் சரியான தருணம் என எதிர்பார்த்துள்ளனர். இந்த நேரத்தில் கொலை நடந்தால், அது அரசியல் கொலையாக மாறும் என்றும், தங்கள் மீதான சந்தேகம் தீரும் என்றும் கொலையாளிகள் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் நினைத்தது போலவே கொலையின் துவக்கத்தில் அது அரசியல் கொலையாகவே பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த நாளில் போலீசாரின் தீவிர விசாரணையில் கொலைக்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம் என தெரியவந்தது. இருந்தாலும் இவையெல்லாம் இன்னும் உறுதிபடுத்தப்படாமல் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்