மதுக்கடையில் அட்டை பெட்டிகளை எடுக்க வழி விட சொன்ன இளைஞர்- பீர் பாட்டிலால் அடித்ததால் பரபரப்பு
தருமபுரி அருகே மது கடையில் அட்டை பெட்டிகளை எடுக்கும் போது பி.இ பட்டதாரி உள்ளிட்ட 4 பேர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த திண்டலானூரை சேர்ந்த திருப்பதி என்பவர் கடத்தூரில் உள்ள அரசு மதுபான கடையின், பின்புறம் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இதில் திருப்பதியின் 4 மகன்களும், அவ்வப்போது தந்தைக்கு உதவியாக கடையில் வேலை செய்து வருகின்றனர். தினமும் இவர்கள் அரசு மதுபானக் கடையில் உள்ள காலி அட்டை பெட்டிகளை எடுப்பது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு ஏழுமலை அட்டை பெட்டிகளை எடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு மது பாட்டில் வாங்குவதற்காக வந்த கடத்தூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விஜய், அஸ்திகிரியூரை சேர்ந்த குமார் ஆகியோரிடம், ஏழுமலை, அட்டை பெட்டிகளை எடுக்க கொஞ்சும் வழி விட சொல்லி கேட்டதற்கு, விஜய் மற்றும் மாது ஆகியோர் ஒதுங்க முடியாது என கூறி தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதுகுறித்து கேட்டதற்கு அப்படித்தான் பேசுவேன் என்று கூறி ஏழுமலையை அடித்துள்ளனர்.
இதைக் கேட்ட ஏழுமலையின் தம்பி அருண்பாண்டியனையும் அடித்துள்ளனர். எதுக்கு அடிக்கிறீங்க என்று கேட்டதற்கு, விஜய்தான் கையில் வைத்திருந்த பாட்டிலால் ஏழுமலையின் இடது பக்க தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ஏழுமலை அலறினார்.
இதையடுத்து அங்கு வந்த ஏழுமலையின் சகோதரர்கள் கருப்பண்ணன் சின்னத்தம்பியையும் , விஜய், குமார், அவரது நண்பர்கள் தினேஷ், சுந்தர் ஆகிய நால்வரும் சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஏழுமலை, அலெக்ஸ் பாண்டியன், கருப்பண்ணன், சின்னத்தம்பி ஆகிய நால்வரும் காயம் அடைந்தனர்.
தொடர்ந்து காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனை தொடர்ந்து கடத்தூர் பேருந்து நிலையம் முன்பு அடித்தவர்களை கைது செய்ய கோரி ஏழுமலை உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தருமபுரி எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனைத்தொடர்ந்து, இது தொடர்பாக விஜய், குமார், தினேஷ் ,சுந்தர் ஆகிய நால்வரையும் கடத்தூர் காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது அரூர் டி.எஸ்.பி., ஜெகநாதன் தலைமையில் காவல் துறையினர் நால்வரையும் வாகனத்தில் ஏற்றி அரூருக்கு கொண்டு சென்றனர். அப்போது கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் காவல்துறை வாகனத்தின் முன்படுத்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல் துறையினருக்கும் கைதானவர்களின் உறவினர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அங்கு வந்த தருமபுரி எஸ்.பி.,ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையிலான காவல் துறையினர் முற்றுகையில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை அங்கிருந்து அழைத்து சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.