(Source: ECI/ABP News/ABP Majha)
சீருடை அணியாத பட்டியலின சிறுமி: பள்ளியில் இருந்து அடித்து வெளியேற்றிய முன்னாள் ஊர் தலைவர்…
மனோஜ் குமார் துபே, அவரது வகுப்பறையில் அமர்ந்து இருந்த சிறுமியை அடித்து, ஜாதி குறித்து பேசி பள்ளியை விட்டு வெளியில் அனுப்பி உள்ளார்.
தலித் சிறுமி ஒருவர் சீருடை அணியவில்லை என்பதற்காக அவரை முன்னாள் கிராமத் தலைவர் ஒருவர் அடித்து பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தொடரும் சாதிய அவலங்கள்
ஒரு சமத்துவ நாடாக இந்தியாவை வளர்க்க வேண்டும் என்று கனவு கண்ட பெரும் தலைவர்கள் வாழ்ந்த நாட்டில் சாதி, மத ஏற்றத்தாழ்வுகள், சாதி ரீதியான வன்மங்கள், தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. சமீபத்தில் கூட ராஜஸ்தான் மாநிலத்தில் பானையில் இருந்த தண்ணீரை குடித்ததற்காக சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் சுதந்திர தின கொண்டாட்டத்தின் மீதே பெரும் கேள்வியை எழுப்பியது. முன்னாள் சபாநாயகர் மீரா குமார் 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இது மட்டும் மாறவில்லை என்று வேதனை தெரிவித்திருந்தார். அந்த பிரச்சினைக்கு பிறகும் மேலும் மேலும் நாடெங்கும் சாதிய வன்கொடுமைகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் மீண்டும் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்தேறி உள்ளது.
தினமும் பள்ளியில் சென்று பிரச்சினை
குற்றம் சாட்டப்பட்டவர் முன்னாள் கிராம தலைவர் மனோஜ் குமார் துபே என அடையாளம் காணப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். மனோஜ் குமார் துபே ஒரு கல்வித்துறை அதிகாரியோ அல்லது பள்ளி ஆசிரியரோ இல்லை, ஆனாலும் அவர் தினமும் அந்த பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளிடம் தவறான முறையில் நடந்து கொள்கிறார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிறுமியிடம் கேள்வி
அவர் முன்னாள் ஊர் தலைவர் என்பதால், அதனை அங்குள்ள யாரும் எதிர்த்து கேள்வி கேட்டதில்லை. மனோஜ் குமார் துபே கடந்த திங்கட்கிழமை அன்று அந்த ஊர் அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் சீருடை அணியாதது குறித்து விசரித்துள்ளார் என்று சௌரி காவல் நிலையப் பொறுப்பாளர் கிரிஜா சங்கர் யாதவ் தெரிவித்தார்.
சாதியின் பெயரால் தாக்குதல்
ஏன் சீருடை அணிந்த வரவில்லை என்று அவர் கேட்டபோது, அந்த சிறுமி, 'தனது தந்தை வாங்கி தருகிறேன் என்று கூறி இருக்கிறார், அவர் வாங்கி தந்ததும் அணிந்து வருகிறேன்' என்று பதிலளித்ததாக கிரிஜா சங்கர் யாதவ் குறிப்பிட்டுள்ளார். இதைக் கேட்ட மனோஜ் குமார் துபே, அவரது வகுப்பறையில் அமர்ந்து இருந்த சிறுமியை அடித்து, ஜாதி குறித்து பேசி பள்ளியை விட்டு வெளியில் அனுப்பி உள்ளார். சிறுமியின் தாயின் புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது தாக்குதல், மிரட்டல் மற்றும் பட்டியல் சாதிகள், பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கிரிஜா சங்கர் யாதவ் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்