Covai: கோவை மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்- நடந்தது என்ன?
Covai Encounter: கோவையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.

Covai Encounter: கோவையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.
சுட்டு பிடிக்கப்பட்ட 3 பேர்:
கோவை விமான நிலையம் பகுதியில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு, 3 பேர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், 3 பேரையும் போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். காயமடைந்த குணா தவசி,சதிஸ் மற்றும் கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரையும் காலில் சுட்டுப் பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களது காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடந்தது என்ன?
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 10 மணியளவில், பிருந்தாவன் நகர் பகுதியில் கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதிக்கு வந்த 3 பேர் காரில் இருவர் இருந்ததை கவனித்துள்ளனர். இதையடுத்து காரின் கதவை தட்டி திறக்குமாறு மிரட்டியுள்ளனர். இதனால் காரில் இருந்த அந்த ஜோடி அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் அச்சத்தால் அவர்கள் கதவை திறக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும் அரிவாளால் காரின் கண்ணாடியை வெட்டி உடைத்து, காதலனுடன் இருந்த கல்லூரி மாணவியை வெளியே இழுத்துள்ளனர். ஆனாலும் அந்த பெண் தனது காதலனை வலுவாக பிடித்துக்கொண்டு கத்தி கூச்சல் போட்டுள்ளார். உடனே அந்த கும்பல் காதலனின் தலையில் அரிவாளால் வெட்ட, படுகாயமடைந்த நபர் மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று, 3 பேரும் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறைக்கு தகவல்:
இதனிடையே, மயக்கத்தில் இருந்து தெளிந்த அந்த இளைஞர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர தேடுதலுக்குப்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவியை மீட்டனர். அந்த மாணவனையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு இருவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை:
கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்ட சம்பவம், கோவையை கடந்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி எடுத்தது. இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற குற்றவாளிகளை தேடி வந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அவர்களை அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தான் துடியலூர் பகுதியில் மூவரும் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அவர்களை சுற்றி வளைத்துள்ளனர். அப்போது தப்பிச் செல்ல முயலவே, மூவரையும் போலீசார் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.





















