சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
இதுகுறித்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
சடலத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை ஆகாது என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு 9 வயதான பட்டியலின சிறுமியை காணவில்லை என போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் காட்டுப்பகுதியில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததும் இறந்த பின்பும் சிறுமியின் சடலத்துடன் உடலுறவு கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். நீல் காந்த், நிதின் யாதவ் ஆகியோர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டது. நீல்காந்த் தன்னை போக்சோ வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் நீல்காந்தை போக்சோ வழக்கில் இருந்து விடுவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுமியின் பெற்றோர் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் போக்சோ அல்லது பலாத்கார குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவித்தது.
சடலத்துடன் உடலுறவு கொள்வது நெக்ரோபிலியா எனவும் பாலியல் வன்கொடுமை குற்றம் நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட பெண் உயிருடன் இருந்திருக்க வேண்டும் எனவும் பாலியல் வன்கொடுமைக்கு பிறகு கொலை என்பது தனிவழக்கு எனவும் நீதிபதிகள் விவரித்தனர். சடலத்துடன் உடலுறவு கொள்வது என்பது பாலியல் வன்கொடுமை ஆகாது என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று அறிவிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தாலும் ஆதாரத்தை அழித்த நீல்காந்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. காரணம், நிதின் யாதவ் செய்த குற்றத்திற்கான ஆதாரங்களை அழித்ததாக நீல் காந்த் மீது குற்றம் சாட்டப்பட்டது.