Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அரசியல் பின்னணி காரணமா? சென்னை போலீஸ் கமிஷனர் பரபரப்பு பேட்டி
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அரசியல் பின்னணி காரணமா? என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் அவரது வீட்டு அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு அரசியல் கொலை அல்ல. கொலை நடந்த 3 மணி நேரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து அவரது உடலை அனுப்ப தயாராக உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளது.
சில பேர் மீது சந்தேகம்:
அந்த தகவலில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்னென்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது? என்று விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்ன காரணம் என்று விசாரணை நடத்தி வருகிறது. அரசியல் கொலை இது அல்ல. அரசியல் கொலைக்கான காரணமாக இருப்பதற்கு காரணங்கள் மிக மிக குறைவு.
அவருடைய ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் இருந்தது. சில தகராறு இருந்தது.அந்த கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. முழு விசாரணை முடிந்த பிறகே கூற முடியும். மற்ற கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். சில பேர் மீது சந்தேகங்கள் உள்ளது. நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது.
கூடுதல் பாதுகாப்பு:
பொன்னை பாலு மீது 4 வழக்குகள், திருமலை மீது 7 வழக்குகள் என அனைவர் மீதும் வழக்குகள் உள்ளது. அருள் மீது மட்டும் எந்த வழக்குகள் இல்லை. மீதி நபர்கள் மீது வழக்குகள் உள்ளது. ஆம்ஸ்டராங்கின் இறுதிச்சடங்கிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். ஆம்ஸ்ட்ராங் அவரது துப்பாக்கியை கடந்த 13ம் தேதி திருப்பி வாங்கிவிட்டார். மார்ச் மாதம் மக்களவைத் தேர்தலுக்காக துப்பாக்கியை கொடுத்தார். தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் வாங்கிவிட்டார்.
இது மிகவும் முக்கியமான வழக்கு. சரியான கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொளத்தூர், செம்பியம், அயனாவரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது வரை ஆற்காடு பாலா, செல்வராஜ், ராமு, சந்தோஷ், திருவேங்கடம், அருள், மணிவண்ணன், திருமலை ஆகிய 8 பேர் சரண் அடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது உடலுக்கு உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான மாயாவதி நேரில் அஞ்சலி செலுத்த சென்னை வர உள்ளார்.