காவல்நிலையத்தில் கைதி மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் - டி.ஜி.பி. உத்தரவு
சென்னையில் காவல்நிலையத்தில் உயிரிழந்த விக்னேஷின் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தலைமை செயலக காவல்நிலையத்தில் கஞ்சா வைத்திருந்ததாக அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினார். இதையடுத்து, அவரது மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றுவதாக தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விக்னேஷின் மரணம் தொடர்பாக உதவி ஆய்வாளர் புகழும்பெருமாள், காவலர் பொன்ராஜ் மற்றும் ஊர்க்காவல்படையைச் சேர்ந்த தீபக் ஆகியோரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு சென்னை தலைமை செயலக குடியிருப்பு காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் 2 நபர்கள் வந்தனர். அவர்கள் 2 பேரையும் மடக்கிப்பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். மேலும், அவர்கள் இருவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளனர். அவர்களை பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கத்தியை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ், 28, மற்றும் பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், 28 என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், விக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதாகவும், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக, எழும்பூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
மேலும், காவல்துறையினர் விக்னேஷின் உடலை அவர்களே புதைக்க முயற்சிப்பதாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்