Crime: உயிருக்கு பயந்து அடுத்தவர் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த ரவுடி..! சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கும்பல்..! நடந்தது என்ன?
சென்னையில் பிரபல ரவுடியை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மாங்காடு அடுத்த பெரிய பணிச்சேரியை சேர்ந்தவர் வினோத். அவருக்கு வயது 27. இந்த நிலையில், அவர் நேற்று அய்யப்பன்தாங்கலில் உள்ள தனது தாயை பார்ப்பதற்காக சென்றுகொண்டிருந்தார்.
வீடு புகுந்து வெட்டிக்கொலை:
அய்யப்பன்தாங்கல், பொன்னியம்மன்கோயில் தெரு அருகே இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது திடீரென இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது.
அந்த கும்பலிடம் இருந்து தப்பிய வினோத் அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து கதவை பூட்டிக்கொண்டார். ஆனால், அவரை விடாமல் துரத்திவந்த அந்த கும்பல் கதவை உடைத்து வீட்டிற்குள்ளே சென்று ஏற்கனவே வெட்டுக்காயத்துடன் இருந்த வினோத்தை மீண்டும் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் வினோத் அதே இடத்தில் உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை:
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த வினோத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக நடந்த கொலையா? என்று விசாரணை நடந்து வருகிறது.
கடந்தாண்டு திருட்டு செல்போன்களை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வினோத் தம்பியை எதிர்கோஷ்டியினரான அஜித் தரப்பினர் வெட்டிக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த கொலைக்கு பழிவாங்க வினோத் நாட்டு வெடிகுண்டுகளுடன் சென்றபோது நாட்டு வெடிகுண்டுகள் தவறிவிழுந்து அவர் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரும் அதிர்ச்சி:
சிறையில் இருந்து வெளியே வந்த அவர் தனது தம்பியின் கொலைக்கு பழிவாங்குவார் என்று அஜித் தரப்பினர் அச்சப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வினோத்திற்கு முன்னதாக முந்திக்கொண்ட அஜித் தரப்பினர் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல ரவுடியை 6 பேர் கொண்ட கும்பல் அடுத்தவர் வீட்டிற்குள் உயிருக்காக நுழைந்தபோதும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது இதுபோன்று நடப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்ற பெண் புதை மணலில் சிக்கி உயிரிழப்பு - குளித்தலையில் சோகம்
மேலும் படிக்க: Crime: கொடூரத்தின் உச்சம்.! பிறப்புறுப்பில் களிமண் திணிக்கப்பட்ட அவலம்..! 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!